சென்னை

கோவில்களில் அடுத்த வாரத்தில் இருந்து தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாகக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை உள்ளது.  இந்த உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட போதிலும் யார் இந்த அர்ச்சனை செய்கிறார்கள் என்க குளறுபடி நிலவி வருகிறது.  இந்நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் அப்போது, “இந்துக்களுக்கு எதிரான கட்சி என தி.மு.கவை என விமர்சனம் செய்யும் பா.ஜ.க தலைவர்களே தி.மு.க ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளைப் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 47 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த வாரத்திலிருந்து தமிழில் அர்ச்சனை செய்யப்படும். இவ்வாறு தமிழில் அர்ச்சனை செய்வோரின் அலைப்பேசி எண்களுடன் விளம்பரப் பலகைகளும் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் புதன் அல்லது வியாழக்கிழமை, முதல்கட்டமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ’அன்னைத்தமிழில் அர்ச்சனை’ என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும். தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர் அந்த அர்ச்சகரைத் தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.

முதலில் பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறையும் அதனைத் தொடர்ந்து சிறிய கோவில்களிலும் கொண்டுவரப்பட உள்ளது.  தற்போது அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடிய அர்ச்சகர்கள் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.