இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் பெஸ்ஸெக்கியனுடன் தொலைபேசியில் பேசினார்.

ஈரானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் (பாரசீக புத்தாண்டு) பண்டிகைகளுக்காக வாழ்த்து தெரிவித்ததோடு, ஈரானியர்களுக்கு அமைதியும் நிம்மதியும் நிறைந்த ஆண்டாக அமையவும் வாழ்த்தினார்.

மேற்கு ஆசியாவில் பதற்றம் மற்றும் மோதல்கள் அதிகரிப்பது குறித்து இந்திய மக்களின் ஆழ்ந்த கவலையையும் மோடி வெளிப்படுத்தினார்.

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான எந்தவொரு தாக்குதலையும் ஒரு கடுமையான அச்சுறுத்தலாகவும், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் விவசாய ஏற்றுமதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் கடுமையாகக் கண்டித்தார்.

மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பையும், பாரசீக வளைகுடாவில் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தையும் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக, இந்தியப் பிரதமர், பல்வேறு உலகத் தலைவர்களுடனான தனது தொடர்புகளையும் பேச்சுவார்த்தைகளையும் குறிப்பிட்டு, போர்ப் பாதையைத் தேர்ந்தெடுப்பது யாருடைய நலனுக்கும் உகந்தது அல்ல; எனவே, அனைத்துத் தரப்பினரும் கூடிய விரைவில் அமைதிப் பாதைக்குத் திரும்புவது அவசியம் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ஈரான் அதிபர் மசூத் பெஸ்ஸெக்கியன், அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திவரும் அத்துமீறல்கள் குறித்து விளக்கியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போரை ஈரான் தொடங்கவில்லை என்றும் ஈரான் அணுஆயுதம் வைத்திருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் அதுகுறித்த பேச்சு நடைபெற்று வரும் வேளையில் எந்தக் காரணமுமின்றி விதிகளுக்குப் புறம்பாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் இஸ்லாமியப் புரட்சியின் உச்ச தலைவர், உயர் பதவியில் இருந்த இராணுவத் தளபதிகள், அப்பாவி மாணவர்கள் உட்படப் பாதுகாப்பற்ற குடிமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானின் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களில் இருந்து, மினாபில் உள்ள “ஷஜ்ரே தய்யிபா” தொடக்கப் பள்ளியை அமெரிக்கா குறிவைத்தது, இதில் 168 அப்பாவிப் பள்ளிக்குழந்தைகள் அநியாயமாக பலியானார்கள்.

ஈரானில் அணுகுண்டு தயாரிப்பதைத் தடுப்பதற்காக ஈரான் மீது இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுகளை நிராகரித்த பெஸ்ஸெக்கியன், அணு ஆயுதங்களை ஈரான் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.

அணுசக்தி நடவடிக்கைகளின் கண்காணிப்பைச் சரிபார்ப்பதை ஏற்றுக்கொள்ள ஈரான் தயாராக இருப்பதாக நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஈரான் தெரிவித்திருந்ததை நினைவு கூர்ந்த பெசிஸ்கியன் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அத்துமீறல்களை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டினார்.

பிராந்தியத்தில் “அமைதியின்மை மற்றும் பதற்றத்திற்கான காரணி” ஈரான் தான் என்ற அமெரிக்காவின் கூற்றையும் பெசிஸ்கியன் நிராகரித்தார்.

மேலும், லெபனான், காசா, ஈரான், ஈராக், கத்தார் மற்றும் அது விரும்பும் இடங்கள் அனைத்திலும் தாக்குதல் நடத்தி, பயங்கரவாதத்தை ஏவுவது இஸ்ரேல்தான் என்றும், பிராந்தியத்தில் அமைதியின்மையையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார்.

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கும், பிராந்திய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பெசிஸ்கியன் அழைப்பு விடுத்தார்.

இதன் மூலம், பிராந்தியத்தில் அமைதியும் பாதுகாப்பும் வெளிநாட்டுத் தலையீடு இன்றி, அந்தந்த பிராந்திய நாடுகளாலேயே உறுதி செய்யப்பட முடியும் என்று வலியுறுத்தினார்.

பிராந்தியத்தில் போரையும் மோதலையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்துவதும், எதிர்காலத்தில் இந்த ஆக்கிரமிப்புகள் மீண்டும் நிகழாது என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதும் ஒரு முன்நிபந்தனை என்று ஈரான் அதிபர் கூறினார்.

பிரிக்ஸ் அமைப்பின் சுழற்சித் தலைமைப் பதவியை இந்தியா வகிப்பதைக் கருத்தில் கொண்டு, ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பைத் தடுப்பதிலும், பிராந்திய மற்றும் சர்வதேச அரங்கில் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் பேணுவதிலும் இந்த அமைப்பு ஒரு சுதந்திரமான பங்கை வகிக்க வேண்டும் என்று பெசிஸ்கியன் அழைப்பு விடுத்ததாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

[youtube-feed feed=1]