சிறப்புக்கட்டுரை:   ஜீவசகாப்தன்

மல் ட்விட்டர் மூலம் தனது அரசியலுக்கான ஆயத்தப் பணிகளை செய்து கொண்டிருக்க,விஷாலோ,ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியதன் மூலம் ஊடக கவனத்தைப் பெற்றுள்ளார்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஷால் நிற்கப் போகிறார் என்பது செய்தியானது. அதன் பிறகு,நிற்பது உறுதி என்பது தலைப்புச் செய்தியானது.விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு பரபரப்பாக, பின்னர் மீண்டும் ஏற்று,மீண்டும் நிராகரிப்பு என அடுத்ததடுத்து விஷால் தமிழகத்தின் பேசு பொருளாக மாறிப்போனார்.

எஸ். எஸ். ரஜேந்திரன்

நடிகர் ஐசரி வேலனிலிருந்து தனக்கான வரலாற்றை ஆரம்பிக்கிறது ஆர்.கே.நகர் தொகுதி. அதற்குப் பிறகு நடிகையாக இருந்து முதலமைச்சராக பரிணமித்த ஜெயலலிதாவும் அந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றிப் பெற, தமிழகத்தின் நட்சத்திர அடையாளம் பெற்ற தொகுதியாக மாறிப் போனது ஆர்.கே.நகர் .இந்த நிலையில்,விஷாலும் அந்த தொகுதியில் களமிறங்க ஆசைப்பட ஆர்.கே.நகர் அதகளப்பட்டு விட்டது.

விஷாலின் அரசியல் ஆர்வத்தைப் பார்ப்பதற்கு முன்,சினிமா நடிகர்களுக்கும் அரசியலுக்குமுள்ள தொடர்பை பற்றிய பார்வை வரலாற்று அவசியமாகிறது.

சட்டமன்றத்திற்குள் நுழைந்த முதல் நடிகர் எஸ்.எஸ்.ஆர்

தமிழகத்தில் மட்டுமல்ல ,இந்தியாவிலேயே முதன் முதலில் சட்டமன்றத்தில் நுழைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். திராவிட இயக்க கொள்கைகளால்,ஈர்க்கப்பட்டு,புராண படங்களிலும்,கடவுள் நம்பிக்கையை வலியுறுத்தும் படங்களிலும் நடிக்கமாட்டேன் என்று இறுதி வரை உறுதியாக இருந்தவர். அதனால்,இலட்சிய நடிகர் என்கிற பட்டம் பெற்றார்.

திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர்,1962 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்,தேனி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தேர்தல் அரசியலில் , 62 ல் நுழைந்தார்.ஆனால்,களஅரசியலில் ஏற்கனவே அவர் தீவிரமாக இருந்தார். 58 ம் ஆண்டு பிரதமர் நேருவிற்கு கருப்புக் கொடி காட்டவேண்டும் என்று திமுக  முடிவெடுத்தது.அப்போது,தலைமையின் முடிவிற்கு கட்டுப்பட்டு,போராட்டக் களத்தில் குதித்தபோது,கருப்புக் கொடி காண்பித்து கைதானவர் எஸ்.எஸ்.ஆர்.

தனக்கென அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து, அதை அடைவதற்காக இலட்சியத்தில் ஒரு பகுதியாக சட்டமன்றத்தையும் தேர்ந்தெடுத்தார். திமுக,அதன் பின் அதிமுக என அவரது அரசியல் பயணம் சென்றது.1980 ம் ஆண்டு அதிமுக சார்பில்,ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் ,தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார் இலட்சிய நடிகர்.நடிகர்கள் தேர்தலில் நிற்கலாம் என்பதற்கு எம்ஜிஆருக்கே முன்னோடி எஸ்.எஸ்.ஆர்தான்.

எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர்

சினிமாவிலிருந்து அரசியலுக்குள் வந்து வென்று காண்பித்தவர் எம்ஜிஆர். இன்று அரசியல் கனவோடு இருக்கும் சினிமா பிரபலங்களுக்கு முன்னுதாரணம் இவர்தான். ஆனால்,பலரும் நினைப்பது போல்,சினிமாவிலிருந்து அப்படியே வந்து, அரசியல் களம் கண்டவர் அல்ல எம்ஜிஆர்.

திமுக என்ற அரசியல் களத்திலிருந்து அரசியல் செய்து அரசியல்வாதியாக, ஏற்கனவே மக்களுக்கு அறிமுகமாகி,அதன் பின் கட்சி ஆரம்பித்தவர்தான் எம்ஜிஆர். அவருக்கு வழங்கப்பட்ட வாத்தியார்,புரட்சி நடிகர் என்கிற பட்டங்களெல்லாம் அரசியலுடன் தொடர்பு படுத்தியே பார்க்கவேண்டும். திமுகவிலிருந்த வரை புரட்சி நடிகராகவும்,அதன் பின் புரட்சித்தலைவராகவும் அவர் பரிணாமம் பெற்றதை வெறும் பட்டம் மறுவடிவம் பெற்றதாக நினைக்க முடியாது.

54 லிருந்து 72 வரை முழுநேர திமுககாரராக இருந்த எம்ஜிஆர்தான் அதிமுக என்கிற புதுக்கட்சி ஆரம்பித்தார். எம்ஜிஆர் என்கிற சினிமா நடிகர் கட்சி ஆரம்பிக்கவில்லை  .67 தேர்தல் பரப்புரையில் குண்டடி பட்டு வாக்கு கேட்டிருக்கிறார். அந்த தேர்தலில் பரங்கிமலை சட்டமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 71 லும் அவர் திமுக சட்டமன்ற உறுப்பினர். அவருடைய வளர்ச்சியி்ல் திமுகவிற்கு அளப்பரிய பங்கிற்கு உண்டு.தி முகவின் வளர்ச்சியிலும் எம்ஜிஆரின் திரைப்படங்களுக்கு அளப்பரிய பங்குண்டு. 17 வருடங்களாக அரசியல் முகமாக அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஜிஆர்தான் அரசியல் கட்சி ஆரம்பித்து வென்றார்.சினிமாவிலிருந்து வந்த எம்ஜிஆர் வென்றார் என்பது மிகவும் மேலோட்டமான பார்வை.

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

ஆரம்பித்தில் அண்ணா கலைஞர் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தாலும்,பின்னர்,காங்கிரசும் காமராசருமே தனது அடையாளம் என்று காட்டிக் கொண்டவர் சிவாஜி. கருப்புச் சட்டை,உதயசூரியன் ,அண்ணா போன்ற அடையாளங்களை தவறாமல் தன் படங்களில் பயன்படுத்துவார் எம்ஜிஆர். அதே போல்,காமராஜர்,நேரு படங்களை அவ்வப்போது சிவாஜியும் பயன்படுத்துவார்.அவர் நடிச்ச தேசபக்தி படங்களும் அவருடயை தேசிய கட்சிக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்து விட்டது. இந்த சிவாஜிதான், எம்ஜிஆர் இறப்பிற்குப் பிறகு,தனிக்கட்சி ஆரம்பித்து ஜானகி அணியுடன் கூட்டணி வைத்து தோல்வியை தழுவினார்.வெற்றிப் பெற்ற எம்ஜிஆரும் சரி, தோல்வியடைந்த சிவாஜியும் சரி, சினிமாவிலிருந்து நேரடியாக அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை என்பதை  கவனிக்க வேண்டும்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா அரசியல் களத்தில் வெற்றிகாண்பதற்கு எம்ஜிஆர்  என்கிற வெற்றி முகம் பயன்பட்டது.  எம்ஜிஆர் இறந்த பிறகு, ஜெயலலிதா சந்தித்த தேர்தலில் அவருக்கு திரைப்பட நடிகை என்கிற அடையாளம் கிடையாது. அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர்,கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் என்கிற அடையாளத்துடன்தான் அவர் தேர்தலை சந்தித்தார். ஆகவே,ஜெயலலிதாவும் சினிமாவிலிருந்து நேரடியாக அரசியலுக்கு வந்தவர் என்று சொல்ல முடியாது.

விஜயகாந்த்

விஜயகாந்தின் ஆரம்பகால திரைப்படங்கள் அனைத்திலும் அனல் பறக்கும் தொழிற்சங்க முழக்கங்கள் இருக்கும். சிவப்பு மல்லி ,அலை ஓசை போன்ற திரைப்படங்கள் வெளிப்படையாகவே இடதுசாரி அரசியல் பேசின. விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில்  விளையாடும் பண்ணையார்  ஓழிப்பே 80 களில் விஜயகாந்த் நடித்த படங்களின் கருவாக இருந்தது. நேரடியாக, எந்த அரசியல் கட்சியிலும் விஜயகாந்த் செயல்பட்டதில்லை. இருப்பினும் ,திமுக ஆதரவாளர் என்கிற மெல்லிய முத்திரை அவருக்கு இருந்ததது.

விஜயகாந்த்

90 களுக்குப் பிறகு விஜயகாந்தின் திரைப்படங்கள் அனைத்தும் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது. தனது ரசிகர் மன்றங்களை,கட்சி அலுவலகம் போல திட்டமிட்டு வளர்த்தெடுத்தார் விஜயகாந்த். ரஜினிகாந்தை விட விஜயகாந்திற்கே, ரசிகர் மன்றங்கள் அதிகம் என்கிறது ஓரு புள்ளி விவரம். 93 ல் வெளிவந்த ஏழை ஜாதி படத்திலிருந்தே தனக்கான அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார். வல்லரசு படத்திற்குப் பிறகு வந்த அனைத்து படங்களிலும், கட்சிக் கொடியை மோதிரமாகவோ,சட்டைப் பனியனாகவோ விஜயகாந்த் காண்பித்து விடுவார்.

ஆக,2005 ல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த நிகழ்வை திடீர் நிகழ்வாக யாரும் பார்த்துவிட முடியாது. முதல் பத்து வருடம் சினிமாக்காரனாகவும்,அடுத்த பதினைந்து வருடங்கள் அரசியல் களத்திற்கான ஆயத்தங்களையும் செய்த விஜயகாந்த் 2005 ல் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் என்றே சொல்ல வேண்டும்.

கமலஹாசன்

கடந்த சில  மாதங்களாக அரசியலுக்கு வருவேன், வரலாம் என்று சொல்லிக் கொண்டிருந்த கமல்ஹாசன் நவம்பர் 7 ம் தேதி தனது பிறந்தநாளன்று நான் வந்துவிட்டேன் என்று பிரகடனம் செய்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 வருடங்களாக இருக்கும் ஒரே நாயகன் கமல் மட்டுமே. இவருடைய திரைப்படங்கள் எதிலும் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் சரத்குமார்,போன்ற நடிகர்களுக்கு இருப்பது போன்ற அரசியல் பன்ச் வசனம் இருக்காது.

கமல்ஹாசன்

விளிம்பு நிலை மக்களின் நாயகன் போன்ற கதாபாத்திர வடிவமைப்பு கிடையாது.தான் சர்வதேச அளவில் சிறந்த நடிகன் என்பதற்கான மெனக்கெடல் மட்டுமே கமலிடம் இருக்கும்.தொழில்நுட்ப யுகத்திலும்,நடிப்பு கலையிலும் உலகநாயகனாக கமலஹாசன் இருக்கலாம்.ஆனால்,உள்ளூர் தேர்தல் அரசியலு்க்கு கமல் புதுசு.சினிமாவிலிருந்து நேரடியாக அரசியலுக்கு வருகிறார் என்கிற கூற்று நூற்றுக்கு நூறு விழுக்காடு கமல்ஹாசனுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற நடிகர்களுக்கு இருந்த கட்சி பலம்,ரசிகர் மன்ற பலம் எதுவுமில்லாமல் நேரடியாக அரசியல் களத்திற்கு வருகிறார்.

டிவிட்டர் களத்தில் இவருக்கு கிடைக்கும் வரவேற்பு உசிலம்பட்டியிலும்,பாப்பிரெட்டிபட்டியிலும் கிடைக்குமா ?என்பது அய்யமே. அரசியல் களத்தில் தடம் பதித்து,அதனை வளர்த்தெடுக்க சமூக வலைதளங்களைப் பயன்படுத்திக் கொள்வது வேறு.சமூகவலைதளங்களில்  கிடைக்கும் வரவேற்பை மட்டும் வைத்து கட்டமைப்பைக் கட்டுவது என்பது வேறு. தமிழகத்தின் தேர்தல் களச் சூழலுக்கு கமல்,எப்படி தன்னை தகவமைத்துக் கொள்ளப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

விஷால்

கமல் வருவாரா? என்பதற்கு இது வரை உத்திரவாதம் இல்லை.ரஜினி இன்னும் தனது தியானத்தை கலைக்கவில்லை. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத, புது வரவாக,விசால் ஆர்.கே.நகரில் தலையைக் காட்டி ,தனது அரசியல் ஆசையை குறிப்பால் உணர்த்துகிறார்.

விஷால்

ஆர்.கே.நகர் தொகுதியில் 30 விழுக்காட்டிற்கும் மேலாக தெலுங்கர்கள் வாக்கு இருக்கிறது .அந்த வாக்குகள் கணிசமாக மதுசூதனனுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆகவே,அதைப் பிரிப்பதற்காகவே,தினகரன் அணியோ அல்லது திமுக அணியோ திட்டமிட்டு விஷாலை களமிறக்கியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுதான் விஷால் போட்டியிட்டதற்குப் பின்ணனி என்றால், விஷாலைப் பற்றிபெரிதாக பேச ஓன்றுமில்லை.

ஆர்.கே.நகரைத் தாண்டி, அவருக்கு அரசியல் ஆசை இருக்குமெனில்,அது எந்த வகையில் சாத்தியம்? என்று பார்க்கவேண்டும். விஷாலுக்கு இருக்கிற சினிமா கவர்ச்சி மட்டும் அரசியல் களத்திற்குள் நுழைவதற்கு போதுமானதல்ல. சினிமா கவர்ச்சியை மட்டும் வைத்து யாரும் இங்கு வென்றதாக சரித்திரம் இல்லை.

இதில் கவனிக்கவேண்டிய மற்றொரு விசயம், எம்ஜிஆருக்கு அரசியல் அடித்தளமாக இருந்த  திமுக போன்ற வலிமையான கட்சி விஷாலுக்கு  கிடையாது. ரஜினிகாந்த்,விஜயகாந்த் போன்று பெரிய அளவில் ரசிகர் மன்றங்களும் விஷாலுக்கு கிடையாது. கமலுக்கு இருக்கும் அறிவு ஜீவி அடையாளமும் விஷாலுக்கு கிடையாது.

ஆனால் விஷால் தனக்கு பலமாக ஓரு விசயத்தை நினைக்கிறார்.. ஊடகத்தை மய்யப்படுத்தி தனது செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்பதில், அவர் மிக கவனமாக இருக்கிறார்.  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பதில் தொடங்கி, வேட்பு மனு ஏற்பு, நிராகரிப்பு வரை ஊடகங்கள் முழுவதும் விஷாலை மட்டுமே மய்யப்படுத்தி இருக்கவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். மூன்று நாட்களாக தினகரனைப் பற்றிய செய்தி இல்லை,திமுக வேட்பாளர் குறித்த செய்தி இல்லை,விஷால் மட்டுமே பிரேகிங் நியுஸ் நாயகனார்.

தான் பாதிக்கப்பட்டதாக ,பிரதமரிடமும் குடியரசுத்தலைவரிடமும் நியாயம் கேட்டதாக இருக்கட்டும், இளைஞர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியது வரை ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகவே தன்னை தக்கவைத்துக் கொண்டார்.

ஊடகங்களின் மூலம் மக்களிடம் போய்ச் சேரலாம். ஆனால்,இடம்பிடிப்பதற்கு களப்பணி மிகவும் அவசியம்.மீனவர் பிரச்சனையில் குமரி குமுறிக் கொண்டிருக்கிறது.அரசியல் களம் காண விரும்பும் விஷால்,தனக்கான களப்பணியை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கியிருக்க வேண்டும்.ஏனென்றால்,மக்கள் வாக்களிக்க மட்டுமல்ல கேள்வி கேட்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.