மும்பை

ஜியோ நிறுவனம் மொபைலை தொடர்ந்து வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி  முதல் ஜியோ கிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை தொடங்க உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மொபைல் சேவை தற்போது மிகவும் வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மற்ற மொபைல் சேவைகளை விட இது மலிவாகவும் அதிக வசதிகளுடனும் உள்ளது எனக் கூறப்படுகிறது. பல முன்னணி மொபைல் சேவை நிறுவனங்கள் ஜியோவுக்கு சமமாக தங்கள் கட்டண விகிதங்களைக் குறைத்துள்ளன. நேற்று இந்த நிறுவனத்தின் 42 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, “வரும் செப்டம்பர் 5 முதல் ஜியோ ஃபைபர் இணையச் சேவை தொடங்கப்பட உள்ளது. இதில்  100 எம்பிபிஎஸ் முதல் 1 ஜிபிபிஎஸ் வரையிலான வேகத்தில் இணையச் சேவை வழங்கப்படும். அத்துடன் இலவச தொலைபேசி அழைப்புக்கள், டிவி, விடியோ அழைப்பு உள்ளிட்டவையும் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டணம் ரூ.700 முதல் ரூ. 10000 வரை இருக்கும். இந்த இணைப்பைப் பெறுவோருக்கு எச்டி தொலைக்காட்சி பெட்டி முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.

இதற்கு ஜியோ ஃபைப்ர் இணைய வாடிக்கையாளர்கள் வருடாந்திர சேவையைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒரு எச்டி அல்லது 4 கே எல் இ டி தொலைக்காட்சி பெட்டியும் செட்டாப் பாக்ஸும் முழுவதும் இலவசமாக  வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த இலவச தொலைக்காட்சிக்கு ஏதேனும் வைப்புத் தொகை அளிக்க வேண்டுமா என்பது பற்றி எவ்வித அறிவிப்பும் அளிக்கவில்லை.