டில்லி
வரும் அக்டோபர் முதல் ஏ டி எம் இயந்திரத்தில் பணம் இல்லை என்றால் அந்த வங்கிக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ டி எம் மூலம் அதிக அளவில் பணம் எடுத்து வருகின்றனர். ஆனால் ஒரு சில ஏ டி எம் இயந்திரங்களில் பணம் நிரப்பாமல் உள்ளதால் அவர்களுக்குப் பணம் கிடைப்பதில்லை. வேறு ஏ டி எம் களை நாட வேண்டி உள்ளது. இதனால் அவசர தேவைக்கான பணத்துக்கு அலையை வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதையொட்டி ரிசர்வ் வங்கி ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ரூ. 10000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது வரும் அக்டோபர் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க இந்த அபராதம் விதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
மேலும் இது குறித்த விளக்கத்தில் ஒரு மாதத்தில் மொத்தம் 10 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பணம் இல்லாத நிலை உருவானால் இந்த அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தவிர வங்கிகளுக்காக ஏ டி எம் இயந்திரங்களைப் பிற நிறுவனங்கள் நிர்வகித்தாலும் இந்த விதிகளின்படி சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த தொகையை நிறுவனங்களிடம் இருந்து வங்கிகள் பிறகு வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.