சென்னை

வரும் நவம்பர் 1 முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில்களில் பயணிக்க முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் முன்பு முன்பதிவில்லாமல் இருந்த 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிக்கவும் முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது.  அவசர வேலையாக ரயிலில் வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள் மிகவும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

தெற்கு ரயில்வே நவம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.  இதன்படி 23 ரயில்களில் முன்பதிவில்லா 2-ம் வகுப்பு ரயில் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இனி பழைய முறைப்படி முன்பதிவில்லா ரயில்பெட்டிகளில் முன்பதிவின்றி பயணிக்கலாம்.

தற்போது பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளது.  இந்த வசதி கோவை – நாகர்கோவில் , திருச்சி – திருவனந்தபுரம் இடையேயான ரயில்களில் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.