டில்லி

டுத்த ஆண்டு முதல் மத்திய அரசின் பணிகளுக்கான தகுதித் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசில் பணிகளைப் பெறக் காமன் எலிஜிபிலிடி டெஸ்ட் எனப்படும் பொதுத் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது.  இந்த தேர்வு இனி ஆன்லைன் மூலம் நடத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.   இந்த தகவலை மத்திய பணியாளர் நலனுக்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜிதேந்திர சிங், “மத்திய அரசுப் பணிகளில் ஆட்களை தேர்வு செய்வதற்கு பொது தகுதித் தேர்வை நடத்துவதற்கான தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (என்.ஆர்.ஏ.) மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த என்.ஆர்.ஏ என்பது பன்னோக்கு முகவாண்மை அமைப்பாக இருக்கும். இந்த முனையம் குரூப் பி மற்றும் குரூப் சி பணிகளுக்கான தகுதித் தேர்வை நடத்தும்.

இந்த சீர்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு தேர்வு மையம் இருக்கும். இந்த மையம் தொலைதூர பகுதிகளில் வாழும் தேர்வர்களுக்கான அணுகலைப் பெரிதும் மேம்படுத்தும். இத்தகைய வரலாற்றுச் சீர்திருத்தத்தின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று, ஒவ்வொரு தேர்வருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதாகும்.

இதன்  மூலம் தேர்வர்கள் எவருக்கும் அவர்களது பின்னணி அல்லது சமூக பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் சமமான வாய்ப்பு வழங்கப்படும். வரும் 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் என்.ஆர்.ஏ நடத்தும் முதல் பொது தகுதித் தேர்வு நடக்க வாய்ப்புள்ளது.

ஆயினும், தற்போதுள்ள மத்திய ஆட்சேர்ப்பு நிறுவனங்களான எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி மற்றும் ஐ.பி.பி.எஸ் ஆகியவை அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட ஆட்சேர்ப்புகளை தொடர்ந்து நடத்தும். தவிர பொதுவான தகுதித் தேர்வு என்பது வேலைகளுக்கான விண்ணப்பதாரர்களைச் சோதிப்பதற்கான முதல்நிலைத் தேர்வாக மட்டுமே இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.