டில்லி

ரே மாதிரியான ரேஷன் கார்டு திட்டத்தை நாடெங்கும் அமல்படுத்த உள்ள மத்திய அரசு முதல் கட்டமாக ஜூன் 1 முதல் 6 மாநிலங்களில் அமல் செய்கிறது.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை தற்போது அந்த கார்டு பதியப்பட்டிருக்கும் குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் மட்டுமே வாங்க முடியும்.  இதனால் வெளியூருக்குச் செல்வோர் தங்களது ரேஷன் பொருட்களை வாங்க இயலாத நிலை உள்ளது.   இதனால் பலர் அவதியுற்று வருகின்றனர்.

இதையொட்டி நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே மாதிரியான ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த யோசித்தது.  இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுமைக்கும் பொருந்தும் வகையிலான பொதுவான வடிவமைப்பில் ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

அத்துடன் மாநில அரசுகள் அதே வடிவமைப்பு முறையைப் பின்பற்றி புதிய ரேஷன் கார்டுகளை மக்களுக்கு வழங்க வலியுறுத்தியுள்ளது.  தற்போது முதல் கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் ஆறு மாநிலங்களில் தற்போது அமல்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 1ம் தேதியிலிருந்து நாடு முழுமைக்கும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய ரேசன் கார்டுக்கான வடிவமைப்பில் பயனாளர்களின் குறைந்தபட்ச தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.   புதிய ரேஷன் கார்டு எண் 10 இலக்கங்களைக் கொண்டதாக இருக்கும். இதில் 81.35 கோடி பயனாளிகளைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 75 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரேஷன் கார்டில்  கார்டு வைத்திருப்பவரின் தேவையான குறைந்தபட்ச விவரங்கள் இருக்கும் என்றும், மாநிலங்கள் அவற்றின் தேவைக்கேற்ப கூடுதல் விவரங்களைச் சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகள் அனைவரும் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்  கீழ் எந்த நியாய விலைக் கடைகளிலிருந்தும் தங்களது ரேஷன் காா்டைப் பயன்படுத்தி பொருள்களைப் பெற முடியும்.

புதிய ரேஷன் கார்டுகளை இரு மொழி வடிவத்தில் வழங்க மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன, இதில் உள்ளூர் மொழி தவிர, மற்ற மொழி இந்தி அல்லது ஆங்கிலமாக இருக்கலாம்.  இந்த ரேஷன் கார்டுகளை  முதற்கட்டமாக 6 மாநிலங்களில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.