நாக்பூர்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரை மேலும் 12ஊழல் வழக்கில்  இருந்து விடுவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம், பாராமதி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் முந்தைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசில் 1999-2009ம் ஆண்டுகளுக்கு இடையே நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் அவர் இருந்தார்.

வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களில் 70,000 கோடி அளவுக்கு ஊழல்கள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் விசாரணையில் உள்ளது.

இந்த நீதிமன்றத்தில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே தாக்கல் செய்த ஒரு பிரமாண பத்திரத்தில் விதர்பா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களில் நடந்துள்ள ஊழல்களுக்கு அஜித் பவார் பொறுப்பல்ல என்று கூறியிருந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி அரசு பதவியேற்பதற்கு முந்தைய நாள் நவம்பர் 27ம் தேதி அந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பரம்பீர் சிங் மற்றொரு பிரமாண பத்திரம் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அதன் மூலம் விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கிய மேலும் 12 திட்டங்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து அஜித் பவார் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொண்ட விசாரணையில் அஜித் பவார் குற்றமற்றவர் எனத் தெரியவந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.