சென்னை

ஜூலை 24ஆம் தேதி சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடங்க உள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குத் தகுதியான குடும்ப தலைவிகளை அடையாளம் காணும் முகாம் சென்னையில் ஜூலை 24 முதல் தொடங்கும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

மொத்தம் 3523 முகாம்கள் அமைக்கப்பட்டு பணிகள் துவங்க உள்ளது.   முகாமை நடத்தப் பள்ளிக் கூடங்கள், சமுதாய நல கூடங்கள், அரசு அலுவலகங்கள், இரவு காப்பகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு தன்னார்வலர்கள் மூலம் பயோமெட்ரிக் முறையில் பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது/.

பயனாளிகளின் விவரங்களை சேகரிக்கும் முகாம்களுக்கான ஊழியர்கள், முகாம்களில் பணியாற்றப் பொறுப்பு அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்ட ஊழியர்களும் நியமனம் செய்யப்பட உள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தேதி வாரியாக தெருக்களைப் பிரித்து வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்றும், அதோடு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின்படி, விண்ணப்பங்கள் பெற்று கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.