டில்லி
வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் ஆர் டி ஜி எஸ் மூலம் பணம் அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் முக்கியமான இரு சேவைகளில் என் இ எஃப் டி மற்றும் ஆர் டி ஜி எஸ் சேவைகள் முக்கியமானதாகும். இதைத் தவிர உடனடியாக பணப் பரிவர்த்தனை செய்யும் ஐஎம்பிஎஸ் ஆகியவையும் உண்டு.
இவற்றில் என் இ எஃப் டி மூலம் ரூ.2 லட்சத்துக்கு உட்பட்ட தொகையை மட்டுமே அனுப்ப முடியும். ரூ. 2 லட்சத்தை விடப் பெரிய தொகையை அனுப்புவது ஆர் டி ஜி எஸ் மூலம் மட்டுமே முடியும். இதன் மூலம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அனுப்ப முடியும்.
ஆர் டி ஜி எஸ் மூலம் விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலை செய்யாத நேரங்களில் பணம் அனுப்ப முடியாது.
இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த ஆண்டு டிசம்பர் முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் ஆர் டி ஜி எஸ் சேவை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனைத்து நாட்களிலும் எந்நேரமும் உடனடியாக பெரிய தொகைகளைப் பணி வர்த்தனை செய்ய முடியும். இந்த அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே இந்த வசதி உள்ள நிலையில் இந்தியாவும் அந்த நாடுகள் வரிசையில் இணைந்துள்ளது.