சென்னை:
ஆக. 5 முதல் கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயப்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது கொரோனா பரவலின் மூன்றாம் அலையா? என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் குறித்து ஆராய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கேரளா சென்றுள்ளனர். இந்நிலையில், தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைப் பேசிய அவர், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில், தெர்மல் ஸ்கீரினிங் மற்றும் ஆர்டிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பேசிய அவர், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயம். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை காண்பித்தும் தமிழகத்திற்குள் வரலாம். ரயிலில் வருவோருக்கும் இது பொருந்தும் என்று கூறினார்.