டில்லி:
அரவிந்த் கெஜ்ரிவால் மீதுள்ள 33 வழக்குகளையும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குள் பைசல் செய்ய ஆம் ஆத்மி தீவிரமாக செயல்படுகிறது.
டில்லி முதல்வராக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது 22 நீதிமன்றங்களில் 33 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் பெரும்பாலானவை அவதூறு பேச்சு தொடர்பான வழக்குகள் தான் அதிகம். இந்த வழக்குகளை எதிர்கொள்வதில் கவனம் செலுத்துவதால் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டுள்ளது.
இது ஒரு காரணம். அதோடு வழக்குகளை எதிர்கொள்ள போதுமான நிதி ஆதாரம், சட்டப்பூர்வ உதவிகள் இல்லாததும் முக்கிய காரணமாக உள்ளது. அதனால் இந்த வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியே பைசல் செய்து கொள்ள கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இதன் ஒரு கட்டமாக தான் வழக்கு தொடர்ந்திருந்த அகாலிதள அமைச்சர் பிக்ராம் மஜிதியா மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோருக்கு கெஜ்ரிவால் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
கெஜ்ரிவாலின் சில வழக்கு விபரங்கள்…
மார்ச் 3 முதல் ஏப்ரல் 10 வரை வெவ்வேறு 11 தினங்களில் 11 வழக்குகளின் விசாரணை நடக்கிறது. மார்ச் 5, 15, 17, 31ம் தேதிகளில் 2 வழக்குகளில் விசாரணை உள்ளது. மார்ச் 23ம் தேதி 3 வழக்குகளில் விசாரணை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டில்லி துணை முதல்வர் மணிஸ் சிசோடியா கூறுகையில், ‘‘எங்களது நேரத்தை நீதிமன்றத்தில் செலவிட நாங்கள் தயாராக இல்லை. மக்களுக்காக பணியாற்ற தான் நாங்கள் இருக்கிறோம். இதில் ஈகோ பிரச்னை எதுவும் இல்லை. எங்களது கருத்துக்களால் சிலர் மன வேதனை அடைந்திருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறோம்’’ என்றார்.