புதுடெல்லி: கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த டெல்லி சட்டசபையின் கூட்டத்தை, சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டுமாய் வழக்கு தொடுத்த நபருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
இந்த அபராதத் தொகை, டெல்லி வழக்கறிஞர்கள் நலச் சங்கத்தில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஷாந்த் குமார் உம்ரா என்பவர் தொடுத்த வழக்கில்தான், இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது விபு பக்ரு என்ற ஒருநபர் நீதிபதியைக் கொண்ட அமர்வு. இதுபோன்ற வழக்குகள் அற்பமானவை என்று நீதிபதி கூறினார்.
டெல்லி சட்டசபைக் கூட்ட நான்காவது அமர்வின் 5வது பகுதி, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதியுடன் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், 2017ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி அதே நான்காவது அமர்வின் 6வது பகுதி தொடங்கியது. இதுகுறித்த அறிவிப்பு, டெல்லி சட்டசபையின் வலைதளத்திலும் பதிவிடப்பட்டிருந்தது.
ஒரு பழையக் கூட்டத்தின் மறுதொடக்கத்திற்கு துணைநிலை ஆளுநரின் உரை அவசியமில்லை. ஆனால், துணை நிலை ஆளுநரின் உரையில்லாமல், இந்தக் கூட்டம் தொடங்கப்பட்டது சட்டவிரோதமானது என அந்தக் குறிப்பிட்ட நபர் மனுதாக்கல் செய்திருந்தார். நீதிமன்றமும் அவருக்கு நன்றாக குட்டு வைத்துள்ளது.
– மதுரை மாயாண்டி