உலகப் புகழ்பெற்ற மசூதி ஒன்றை கொச்சைப்படுத்தி முகநூலில் கருத்து ஒன்றை வெளியிட்டதாக ப்ராமணபார்ஹியா பகுதியில் வசிக்கும் இந்துக்கள் மீது கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. 20 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு, 15 கோவில்களும் சூறையாடப்பட்டன. இதையடுத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கோரி இந்துக்கள் தீவிரமாக போராடிவருகின்றனர்.
இந்தச் சூழலில் நேற்றும் இதே பகுதியில் விஷமிகள் 6 இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். இதையடுத்து இந்துக்கள் அப்பகுதியில் இருந்து காலி செய்து வேறு இடங்களில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.
கடந்த வாரத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பாக போலீசார் இதுவரை 44 பேரை கைது செய்து சிறையில் வைத்திருக்கின்றனர். இதையடுத்து டாக்காவில் பலநூறு இந்துக்கள் கூடி வன்முறையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் மனித உரிமை ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் தாக்கப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் ஆளும் அவாமி லீக் கட்சியின் பொதுச்செயார் மஹ்புல் ஆலம் ஹனீஃபின் காரை சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்துகள் தங்களை சிறுபான்மையினராகக் கருத வேண்டாம், அரசு உங்கள் பக்கம் உள்ளது. தாக்குதல் நடத்திய விஷமிகள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.