சென்னை: சென்னையில் அடிக்கடி பெய்து வரும் மழை மற்றும் மழைநீர் சேகரிப்பு காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக  குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை மாநகரில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் நிலத்தடி நீர்மட்டம்  குறித்து ஆய்வு செய்த சென்னை குடிநீர் வாரியம், கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத நிலத்தடி நீர்மட்ட ஒப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகரம் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இப்பகுதிகள் மணல், களிமண், பாறை சார்ந்த பகுதிகளாக உள்ளன. இந்த 3 விதமான பகுதிகளிலும் நிலத்தடிநீர் மட்டம் மற்றும் நீர் ஊடுருவும் தன்மை வேறுபடுகிறது. அதுபோல சென்னையில் கடந்த அக்டோபர் 1ந்தேதி  முதல் 31ந்தேதி  வரை 24 செமீ மழை பெய்துள்ளது. வழக்கமாக 27 செமீ மழை பெய்ய வேண்டும். வழக்கத்தைவிட 3 செமீ அதாவது 12 சதவீதம் மழை குறைவாக பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாநகரம் முழுவதும் 145 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கிணறுகள் மூலம், மாதந்தோறும் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத நிலத்தடி நீர்மட்ட ஒப்பீட்டு அறிக்கை  வெளியாகி உள்ளது. அதில்,

மாநகரில் உள்ள 15 மண்டலங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 0.92 மீட்டர், குறைந்தபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 0.20 மீட்டர் உயரம் வரை நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும,  தற்போது அனைத்து வீடுகளிலும் மழைநீர் கட்டமைப்பு செயல்படும் நிலையில் உள்ளதா என சென்னை குடிநீர் வாரியத்துடன் இணைந்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், செயல்படாத கட்டமைப்புகள் இருந்தால் அதை சரி செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். கட்டமைப்புகள் இல்லாத வீடுகளில், கட்டமைப்பை ஏற்படுத்தவும் அறிவுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் உள்ள  8 கோயில் குளங்கள், 210 நீர்நிலைகள் மற்றும் 117 சமுதாய கிணறுகள் உள்ளிட்டவற்றை சீரமைத்து, அவற்றில் மழைநீர் சென்று சேர வழிவகை செய்துள்ளோம். இதன் காரணமாகவும் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.