சேலம்: அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வந்ததால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் நேற்று  நள்ளிரவு பவர்கட் நேரத்தில் டார்ச் லைட் அடித்து சாலையில் நின்று போராட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மெரினா போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் டார்ச் லைட் அடித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அதே பாணியில்  தொடர் மின்வெட்டை கண்டித்து சேலத்தில் பொதுமக்கள் செல்போன்களை ஒளிரச் செய்தும், வீதியில் படுக்கைகளுடன் வந்து அமர்ந்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு தலைதூக்கி உள்ளது. இதற்கு மின்சார டிரான்ஸ்பார்மர்கள் சரியான முறையில் பராமரிக்காததே காரணம் என தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக அரசுமீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்து உள்ளார். அடிக்கடி எழும் மின்வெட்டு காரணமாக சென்னை வாசிகளும், திமுக அரசுமீது கடுமையான அதிருப்திகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாநகர் பட்டை கோவில் அடுத்துள்ள  பி.வி.அய்யர் தெரு, பூஞ்சன் குட்டை தெரு  பகுதிகளில் அடிக்கடை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறத. இந்த  பகுதியில் கைத்தறி நெசவாளர்கள், கூலி தொழிலாளர்கள் என  ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் மின்வெட்டால் தங்களது பணி பாதிக்கப்படுவதாகவும், இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டால், வீட்டில் படுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர். இதுதொடர்பான மின்வாரியத்திடம் புகார் அளித்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் பலமணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள்  பெரிதும் அவதிபட்டனர். மின்தடை குறித்து புகார் அளித்தும்,  அதை சரிபார்க்க யாரும் வராததால், வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். நள்ளிரவு நேரம் என்பதால், அப்பகுதி மக்கள் தங்களது பாய் படுக்கைகளுடன் வீதிக்கு வந்து, சாலையில் பாயைப் போட்டு அமர்ந்து கொண்டதோடு , மொபைல் போன் டார்ச் லைட் அடித்து ஒளிரச் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மின்வெட்டு குறித்து கூறிய மின்வாரிய அதிகாரிகள்,  சேலம் மாநகர் முழுவதும்  ஜூன் மாதம் முதலே மின் பராமரிப்பு பணிகள்  நடைபெற்று வருகிறது. பல மின் கம்பங்களில்  புதிய மின்கம்பிகள் மாற்றம் செய்யும் பணி, பீங்கான் இன்சுலேட்டர் க்கு பதிலாக மின்தடை ஏற்படாத வண்ணம் நவீன பைபர் பொருளால் உருவாக்கப்பட்ட இன்ஸ்லெட்டர் மாற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்துவிடும் என்று கூறியுள்ளனர்.