டில்லி
காங்கிரஸ் அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதிய திட்டத்துக்கு புகழ்பெற்ற பிரஞ்ச் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி உதவ முன் வந்துள்ளார்.
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி. கடந்த ஜனவரி மாதம் இவரை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவில் தற்போது நிலவி வரும் கடுமையான பொருளாதார சிக்கல் குறித்து விவாதித்துள்ளார். அப்போது இந்த பொருளாதார சிக்கலில் இருந்து ஏழை மக்களை விடுவிக்க காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் திட்டம் அமைக்கும் என ராகுல் தெரிவித்தார்.
தற்போது ராகுல் காந்தி குறைந்த பட்ச வருமானம் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 குறைந்த பட்ச வருமானம் அளிக்கப்படும் என அறிவித்தார். இந்த திட்ட்த்தை பாஜகவினர் நடைமுறைக்கு ஒத்து வராத திட்டம் என அறிவித்தனர். ஆனால் இது நடைமுறைக்கு ஒத்து வரும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
இன்று முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் இந்த திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் அதற்கு உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்கள் உதவ உள்ளதாகவும் தெரிவித்தார். அதைப் போலவே தாமஸ் பிக்கெட்டி இந்த திட்டத்துக்கு உதவ ஒப்புக் கொண்டுள்ளார். பாரிஸ் எகானாமிக்ஸ் கல்வி நிலையத்தின் பேராசிரியரான இவர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது தாமஸ், “இந்தியாவில் ஏழை மக்கள் மிகவும் துயருற்று வருகின்றனர். அவர்களை சாதி சச்சரவு, பணக்காரர் – ஏழை பிரிவு ஆகியவற்ற்லிருந்து விடுவிக்க நேரம் வந்துள்ளது. நான் அதற்காக இந்த குறைந்த பட்ச ஊதிய திட்டம் குறித்து பேராசிரியர் அபிஜித் பானர்ஜி உடன் கலந்துரையாடிய பின் யோசனை தெரிவித்தேன். இனி இந்த திட்டத்தை நிறைவேற்ற நான் அபிஜித் பானர்ஜி உடன் இணைந்து உதவ உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.