பெங்களூரு: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான அனந்தகுமார் ஹெக்டே பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: காந்தி தலைமையிலான சுதந்திர போராட்டம் ஒரு நாடகம், அத்தகையவர்களை இந்தியாவில் மகாத்மா என்று எப்படி அழைக்கப்படுகிறார்கள்?
முழு சுதந்திர இயக்கமும், ஆங்கிலேயர்களின் சம்மதத்துடனும் ஆதரவிலும் நடத்தப்பட்டது. இந்த தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களில் எவரும் ஒரு முறை கூட போலீசாரால் தாக்கப்படவில்லை.
அவர்களின் சுதந்திர இயக்கம் ஒரு பெரிய நாடகம். இது ஆங்கிலேயர்களின் ஒப்புதலுடன் இந்த தலைவர்களால் நடத்தப்பட்டது. இது ஒரு உண்மையான போராட்டமோ, சண்டையோ அல்ல.
காங்கிரசும், அதனை ஆதரிக்கும் மக்களும் சத்தியாக்கிரகம் காரணமாக இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இது உண்மையல்ல. சத்தியாக்கிரகம் காரணமாக ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை.
விரக்தியடைந்து தான் பிரிட்டிஷ் சுதந்திரத்தை வழங்கியது. வரலாற்றை படிக்கும்போது என் இரத்தம் கொதிக்கிறது. அத்தகையவர்கள் நம் நாட்டில் மகாத்மாவாக மாறுகிறார்கள் என்று பேசியிருக்கிறார்.