பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக தென் ஆப்ரிக்க சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி தனது 18 வது வயதில் உயிர் நீத்த சாமி நாகப்ப படையாட்சியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து தென் ஆப்ரிக்க நாட்டிற்கு தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத்தின் நாகை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களின் வழித்தோன்றல் சாமி நாகப்பன் படையாட்சி.
ஆங்கிலேயரின் காலணி ஆதிக்க நாடான தென் ஆப்ரிக்காவில் இருந்த பல்வேறு ஆசிய இனத்தவர்கள் அரசிடம் தங்கள் பெயர் மற்றும் கைரேகையைப் பதிவிட்டு அதற்கான சான்றுடன் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்ற அடக்குமுறை சட்டம் கொண்டுவந்தனர்.
1906 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆசியர்கள் பதிவுச் சட்டம் (Asiatic Registration Act) என்று அழைக்கப்பட்ட இந்த சட்டத்தின் படி, இவர்களுக்கென வரையறுக்கப்பட்ட பகுதியைத் தவிர வேறு எங்கும் செல்வதற்கு இவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது.
இந்த அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடியவர்களில் சாமி நாகப்பன் முன்னோடியாக விளங்கினார்.
பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த நாகப்பன் படையாட்சி அதற்காக சிறைவாசத்தையும் அனுபவித்தார்.
1909 ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட சாமி நாகப்பன் என்ற பதினெட்டே வயது நிரம்பிய இளைஞரை கல் உடைப்பது உள்ளிட்ட வேலைகளை வழங்கியதோடு எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வெட்டவெளியில் தங்க வைத்தனர்.
அதன் காரணமாக நிமோனியா காய்ச்சலுக்கு ஆளான சாமி நாகப்பனுக்கு சிறையில் எந்தவித மருத்துவ உதவியும் செய்யப்படவில்லை, மாறாக உடல் நலிவுற்ற நாகப்பனை சிறையில் இருந்து 30-6-1909 அன்று வெளியேற்றினர்.
ஒரு வாரம் கழித்து உடல் நலம் குன்றிய சாமி நாகப்ப படையாட்சி ஜூலை 6, 1909 ம் ஆண்டு உயிரிழந்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்திற்கு எதிராக அஹிம்சா முறையில் போராடி உயிர் நீத்த முதல் கள பலியானவராக இன்றளவும் சாமி நாகப்பன் படையாட்சி போற்றப்படுகிறார்.
இந்தியர்களிடையே மகாத்மா காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாகிரக கொள்கை பரிச்சயமாவதற்கு முன்பே தென் ஆப்ரிக்காவில் அவருக்கு தோள்கொடுத்ததோடு அவரது கொள்கைக்காக உயிரையும் நீத்தவர் சாமி நாகப்பன்.
சாமி நாகப்ப படையாட்சியின் தியாகத்தைப் பல்வேறு பத்திரிகைகளிலும் கூட்டங்களிலும் நினைவு கூர்ந்த மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அவரது நினைவிடத்தில் 1914 ம் ஆண்டு நினைவு தூணையும் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் போராட்ட தியாகி சாமி நாகப்பன் படையாட்சிக்கு அவரது பிறந்த ஊரான மயிலாடுதுறையில் சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.