3
நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி ஆகும்.  இந்த கல்லூரியில் இடம்  கிடைத்து விட்டால் போதும். கட்டணம் கிடையாது.
அது மட்டுமல்ல…  கல்லூரி விடுமுறையில் ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் சொந்த ஊருக்கு இலவசமாக  சென்று வரலாம். பாட புத்தகங்கள் வாங்க  ரூ.12 ஆயிரம்,  சீருடை  வாங்க  முதல் ஆண்டில் ரூ.6 ஆயிரம், அடுத்த ஆண்டு உடைகள் பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.1,250, முடி வெட்ட மாதம் ரூ.100 அளிக்கப்படும்.
இதுபோல மாணவர்களுக்கு தேவையான பல்வேறு சலுகைகள்  அளிக்கப்படுகின்றன.  படிப்பு முடிந்த பின்பு இந்திய ராணுவத்தில் நிரந்தரமான அல்லது குறுகியகாலப் பணியில் மருத்துவராக பணியாற்றலாம்.
மகாராஷ்ட்ரா யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இந்தக் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 130 இடங்களில் 105 இடம் மாணவர்களும், 25 இடம் மாணவிகளும்  ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய குடிமக்கள் மட்டுமே இந்தக் கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர்களுக்கு திருமணம் ஆகி இருக்கக்கூடாது. படிப்புக் காலத்திலும் மாணவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இங்கு படிக்கச் சேரும் மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்துதான் படிக்க வேண்டும். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது.
+2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், இயிற்பியல் பாடங்களில் சராசரியாக 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம் மூன்று பாடங்களிலும் ஒவ்வொன்றிலும் 50 சதவிகிதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவிகிதத்திற்கு குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி 17 வயது பூர்த்தியடைந்து முதல் தடவையிலேயே +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக அகில இந்திய அளவில் மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) நடத்தும் (AIPMT) நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.  மேலும் ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் விண்ணப்பித்து, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வையும் எழுதியுள்ள மாணவர்களில் தகுதியுடைய மாணவர்கள், மற்றொரு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.250.  இதனை பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2016
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.afmc.nic.in என்ற இணையதளத்தை பாருங்கள்.