நொய்டா

முனா எக்ஸ்பிரஸ் வே என்னும் நெடுஞ்சாலையில் இரவில் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு இலவசமாக டீ, காஃபி கொடுக்க ஒரு தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

யமுனா எக்ஸ்பிரஸ் வே நொய்டாவில் உள்ள 165 கிமீ தூரமுள்ள நெடுஞ்சாலை.   இங்கு இரவு நேரங்களில் விபத்துகள் அதிகம் நேரிடுகின்றன.  அதுவும் இரவு 1 மணியில் இருந்து விடியற்காலை 5 மணிக்குள் தான் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன.  அந்த நேரத்தில் ஓட்டுனர்களால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாததால் இதுவரை நடந்த 4076 விபத்துக்களில் 548 பேர் மரணமடைந்துள்ளனர்.

விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலை அதிகாரிகள், மற்றும் இந்த சாலை பராமரிப்பை ஏற்றுக் கொண்ட ஜேபி இன்ஃப்ரா டெக் என்னும் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் அண்மையில் ஒரு சந்திப்பை நிகழ்த்தினர்.  அதில் இந்த விபத்துக்கள், மற்றும் அதற்கான காரணங்கள், சாலையை மேலும் மேம்படுத்துதல் போன்ற விவாதங்கள் நடந்தன.

இறுதியில் சாலைகளை மேம்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும் என ஜேபி இன்ஃப்ராடெக் ஒத்துக் கொண்டது.   அத்துடன் சாலை விபத்துக்களை தவிர்க்க இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஓட்டுனர்களுக்கு அவர்களை தூங்காமல் கவனமாக வாகனங்களை ஓட்ட உதவியாக இரவில் இலவசமாக டீ, காஃபி ஆகியவற்றை வழங்க நிர்வாகம் தானாகவே முன் வந்து ஒத்துக் கொண்டது.