புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு அரிசி மற்றும் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பலரும் பணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. சென்ற கொரோனா ஊரடங்கிலும் பல மாநிலங்களில் இது போல் வழங்கப்பட்டது.
அவ்வகையில் சென்ற கொரோனா ஊரடங்கின் போது புதுச்சேரியின் அப்போதைய காங்கிரஸ் அரசு ரேஷன் கார்டுகளுக்கு இலவசமாக உணவுப் பொருட்களை வழங்க முன் வந்தது. ஆனால் அப்போதைய ஆளுநரான கிரண் பேடி இந்த தீர்மானங்களை தொடர்ந்து நிராகரித்ததால் மக்களுக்கு இலவச பொருட்கள் வழங்க இயலவில்லை.
தற்போதைய பாஜக கூட்டணி அரசு அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவசமாக அரிசி, சமையல் எண்ணெய் வழங்கத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தற்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி உள்ளதால் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி மற்றும் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.