திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் 3 நாட்கள் இலவச தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு தினங்களில் ஒன்று தைப்பூசம். தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரும் நாளை தைப்பூச திருநாளாக கொண்டாடுகிறோம். இது தீமையை, நன்மை வெற்றி கொண்ட நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளிலும் உள்ள முருக பக்தர்கள் இந்த நாளில் விழா எடுத்து கொண்டாடுவது உண்டு.
உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்கள் தைப்பூசத்தை ஒட்டி குறைந்த பட்ச நாட்கள் முதல் ஒரு மண்டலம் வரை விரதம் கடைபிடித்து பக்தியுடன் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். இதனால் முருகன் கோவில்களில் கூட்டம் அலைமோதும். மேலும், பல பக்தர்கள் பலவகையான காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திகடனை செலுத்துவர்.

இதன் காரணமாக, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகக் கருதப்படும் பழனி முருகன் கோயிலில் ஜன.31ம் தேதி முதல் 3 நாட்கள் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் இலவசமாக சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புராணக் கதைகளின் படி, முருகப் பெருமான் தேவர்களின் சேனாதிபதியாக கருதப்படுகிறார். சூரபத்மனை வதம் செய்வதற்காக அன்னை பார்வதியிடம் இருந்து, முருகப் பெருமான் வேல் வாங்கிய தினமாக தைப்பூச திருநாள் குறிப்பிடப்படுகிறது. முருகப் பெருமானின் திருக்கைகையில் இருக்கும் வேல், ஞானத்தின் வடிவமாக கருதப்படுகிறது. இது பிரம்ம ஞானத்தின் அடையாளமாகவும் சொல்லப்படுகிறது. உலகத்தை தீய சக்திகளிடம் இருந்து காத்து, அனைவருக்கும் நன்மைகளை வழங்குவதற்காக பார்வதி தேவி, வேல் என்னும் ஆயுதத்தை முருகப் பெருமானுக்கு அளித்ததாக சொல்லப்படுகிறது.
[youtube-feed feed=1]