சென்னை:

பெண்களுக்கு இலவச உடல் அழகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வசதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. மார்பக அளவை குறைத்தல் அல்லது அதிகரித்தல் போன்ற அறுவை சிகிச்சையும் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘‘இந்த வசதியை அறிமுகம் செய்யவில்லை என்றால் இதில் பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் செயல்களும், பெரிய அளவில் கடன் வாங்கும் நிலையும் மக்களுக்கு உருவாகலாம். இதற்கான நிதியை தற்போதைக்கு அரசு வழங்கும்.

பின்னர் மாநில அரசின் காப்பீட்டு திட்டத்தை மேற்கொள்ளும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். சமூக காரணங்களுக்காக இதற்கு காப்பீட்டு திட்டத்தில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்’’ என்றார்.

ஸ்டான்லி மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் ரமாதேவி கூறுகையில், ‘‘புற்றுநோய் நோயாளிகளுக்கு மார்பக அறுவை சிகிச்சை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மார்பக அளவை கூட்ட வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று விரும்புவோருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

மார்பகம் பெரிதாக இருப்பதால் சிலருக்கு தோள்பட்டை வலி, கட்டி, பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. எனினும் பலர் தங்களது தன்நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள மார்பக அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். ஆரோக்கியத்துடன் இருக்கும் பெண்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி தேவையில்லை என்பது எனது கருத்து’’ என்றார்.

இந்த அறுவை சிகிச்சைக்கான நோயாளிகள் பதிவு திங்கள் கிழமை தோறும் நடைபெறும். அறுவை சிகிச்சைக்கு முன்பு பெண்களுக்கு அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொது சுகாதார துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறுகையில், ‘‘அழகு பராமரிப்புக்கு அரசு நிதி வீணாக செலவிடப்படுகிறது. இது பொது நல சுகாதார திட்டம் கிடையாது. அரசின் நிதி தொற்று நோய் மற்றும் தொற்று இல்லாத நோய் சிகிச்சைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உயிர்காக்கும் சிகிச்சைகளில் கவனம் செலுத்துவதை தவிர்த்து அழகு பராமரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது’’ என்றார்.