ரயில்வே பொறியாளரை சிறைபிடித்து 5 கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்று தப்பியோடிய மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ராம் பிரசாத் தெற்கு ரயில்வேயில் பொறியாளராக பணி புரிகிறார்.

இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம கும்பல் தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.

ராம் பிரசாத் தனது ஆதார் கார்டை பயன்படுத்தி 3 வங்கிகளில் இருந்து ரூ. 38 கோடி கடன்பெற்று வங்கியை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டை கூறினர்.

இதையடுத்து வீடியோ கால் மூலமும் பேசி மிரட்டிய அந்த கும்பல் பெரியமேட்டில் உள்ள லாட்ஜ்க்கு விசாரணை என்ற பெயரில் வரவழைத்தனர்.

அங்கு வந்த ராம் பிரசாத்திடம் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க ரூ. 5 கோடி கேட்டு மிரட்டிய அந்த கும்பல் அவரிடம் இருந்த செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு இரண்டு நாள் அங்கேயே சிறைவைத்தனர்.

இந்த நிலையில், தனது கணவர் இரண்டு நாட்களாக காணாமல் போனதை அடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ராம்பிரசாத்தின் மனைவி புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் அவரது செல்போன் மூலம் அவரது இருப்பிடத்தை ட்ராக் செய்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், சிபிஐ-யோ காவல்துறையோ யாரிடமும் வீடியோ கால் மூலம் விசாரணை மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் இதுபோன்ற மோசடி கும்பலிடம் உஷாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உ.பி. சைபர் கிரைம் : லக்னோ பெண் மருத்துவரிடம் ரூ. 2.81 கோடி ஏமாற்றிய மோசடி கும்பல்…