சென்னை:
தமிழக ஆளுநர் தங்கியுள்ள ராஜ்பவனுக்கு தேவையான பர்னிச்சர் பொருட்கள் வாங்கியதாக போலி பில் தயாரித்து மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தேவையான பர்னிச்சர் உள்பட மரச்சாமான்கள் அடையாறு பகுதியை சேர்ந்த முகமது யூனிஸ் என்பவர் விநியோகம் செய்து வந்தார். தொடர்ந்து சில ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வந்த அவர், பல பொருட்களை சப்ளை செய்யாமலே, சப்ளை செய்ததுபோல போலி பில்கள் தயாரித்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆய்வு நடத்திய கவர்னர் மாளிகை அதிகாரிகள், மோசடி நடைபெற்றதை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து முகமது யூனிசுடன் நடத்தி விசாரணையில், பல பொருட்களுக்கு போலி பில் தயாரித்து மோசடி செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த கிண்டி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியில் கவர்னர் மாளிகை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.