கச்சதீவு தொடர்பாக சமீபத்தில் அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ. கடிதத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், மத்திய அரசின் அமைச்சகங்களை ஆளும் பாஜக-வினர் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி ஜோடிப்பு வேலைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கச்சதீவு விவகாரம் தொடர்பாக தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கடந்த 31-3-2024 வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பதில் அடங்கிய கடிதம் அந்த செய்தியில் வெளியானது.

கச்சதீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் இந்திரா காந்தியும் தமிழகத்திற்கும் தமிழக மீனவர்களுக்கும் துரோகம் செய்துள்ளனர் இதற்கு திமுக-வும் காரணம் என்று அண்ணாமலை தொடங்கி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முதல் பிரதமர் மோடி வரை அனைவரும் ஒப்பாரி வைத்தனர்.

இந்த நிலையில், இந்த ஆர்.டி.ஐ. கடிதத்தில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

5-3-2024 அன்று வெளியுறவுத் அமைச்சகத்திடம் அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு அஜய் ஜெயின் என்ற துணை செயலர் (Under Secretary) 31-3-2024 அன்று 17 பக்கம் கொண்ட கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.

31-3-2024 அன்று வழங்கப்பட்ட பதில் அன்று காலை வெளியான தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியானது குறித்தும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் இதுபோன்ற கடிதமும் செய்தியும் வெளியானது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறையில் பணிபுரியும் துணை செயலர் விவரம் குறித்து தகவலறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் 2-5-204 அன்று கிடைத்த பதிலில் அங்கு அஜய் ஜெயின் என்ற பெயரில் துணை செயலர் யாரும் பணியாற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கச்சதீவு தொடர்பான அண்ணாமலை கேள்விக்கு வழங்கப்பட்ட ஆர்.டி.ஐ. பதில் மற்றும் நாளிதழில் அது வெளியான தேதி மற்றும் அதில் கையெழுத்திட்ட அதிகாரி என அனைத்திலும் மோசடி நடந்திருப்பதை அடுத்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இருந்து கடிதம் வெளியாவதற்கு முன்பே நாளிதழுக்கு சென்றது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளதுடன் இதுகுறித்து அமைச்சகம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.