பாரிஸ்

தாலிபான்கள் தாங்க மாறிவிட்டதை உலகுக்கு தங்கள் செயல் மூலம் நிரூபிக்க வேண்டும் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி புதிய அரசு அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.    தாலிபான்கள் நாட்டைக் கைப்பற்றியதால் ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்.    அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாலிபான்கள் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகள் என்பதால் ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டம் அமலாகலாம் என அஞ்சப்படுகிறது.  இதனால் பெண்கள் விடுதலை நசுக்கப்படலாம் எனவும் தண்டனைகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.  பலரும் நாட்டை விட்டுத் தப்பி ஓடி வருகின்றனர்.

தாலிபான்கள் செய்தி தொடர்பாளர், “நாங்கள் அனைத்து நாடுகளின் தூதரகங்களும் இயங்க அனுமதிக்க உள்ளோம்.  பெண்கள் பணி புரிய தடை செய்ய மாட்டோம்.  ஆப்கானில் பிற நாடுகளுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் நடக்க அனுமதிக்க மாட்டோம்” என அறிவித்தார்.  ஆயினும் பல உலக நாடுகள் அதை நம்பவில்லை.

நேற்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை ஆமிசர் ஜீன் எவிஸ் லெ டிரெயின் தனது டிவிட்டரில், “தாலிபான்கள் தாங்கள் மாறி விட்டதாகத் தெரிவிக்கின்றனர்.   ஆனால் அவர்கள் தங்களது செய்கைகள் மூலம் அதை உலகுக்கு நிரூபிக்க வேண்டும்.   அவ்வாறு நிரூபிப்பது அவர்கள் கையில்தான் உள்ளது” எனப் பதிந்துள்ளார்.