ரஃபேல் போர் விமானம் வாங்க டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது பிரான்ஸ் அரசு. புதிதாக 28 எப்4 ரக போர் விமானம் தயாரிக்க ரூ. 2.3 பில்லியன் டாலர் அளவில் ஒப்பந்தம போடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தல் முறைகேடு நடைபெற்று உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், பிரான்ஸ் அரசு சர்ச்சைக்குரிய டசால்ட் நிறுவனத்துடன் புதிய விமானம் மற்றும் பழைய விமானங்கள் மேம்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, 2012-ம் ஆண்டு பிரானஸ் நாட்டிடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் மத்தியில் ஆட்சி மாறிய நிலையில், ரஃபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.
தொடர்ந்து 2015-ம் ஆண்டு பிரான்சை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் 36 விமானங்கள் வாங்கு வதற்காக 58,000 கோடி ரூபாய் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயித்த விலையை விட பலமடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டில் விமானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இந்த ஒப்பந்தத்தில் விமானத்தின் உதிரிப்பாகங்கள் தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்த வழங்கப்பட்டதிலும், காங்கிரஸ் நிர்ணயித்த முந்தைய விலையைக் காட்டிலும் அதிகமான விலையில் ஒப்பந்தம் செய்து ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் வருகிறது.
இந்த நிலையில் குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் டசால்ட் நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு 2.3 பில்லியன் டாலர் அளவிலான 28 எப்4 ரக ரஃபேல் விமானம் மேம்படுத்த ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதன்படி 2022ம் ஆண்டுக்குள் இந்த எப்4 ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டு 2024ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிரான்சின் ஆயுதப் படைத் துறை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி, டசால்ட் நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து, இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். இது டசால்ட் நிறுவனத்தின் விமான ஒப்பந்தங்களில் 180ஆக அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், 30 எப்4 ரக விமானங்கள் வாங்க பிரெஞ்ச் விமானத்துறை முடிவு செய்துள்ளதாகவும், அந்த விமானங்கள் 2027ம் ஆண்டுக்குள் டசால்ட் நிறுவனம் டெலிவரி செய்யும் என்றும் தெரி வித்துள்ளார். இதைத்தொடர்ந்து 2030ம் ஆண்டுக்குள் பிரெஞ்சு விமானப்படையில் 210 ரஃபேல் போர் விமானங்கள் இடம்பெறும் என்றும் கூறி உள்ளார்.
இந்த எப்4 ரக ரஃபேல் போர் விமானத்தில் மேம்படுத்தப்பட்ட ராடர் கண்காணிப்பு சென்சார், நுண்ணறிவு உள்பட பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், எம்பிஏவின் மைகா என்ஜி ஏர்- ஏவுகணை மற்றும் 1,000 கிலோகிராம் வெடி பொருட்கள் எடுத்துச் செல்லும் வகையிலும் நவின முறையில் உருவாக்கப்படுகிறது. இந்த விமானம் மூலம் தரையில் இருந்து ஏவுகணை செலுத்த முடியும் என்றும், பல்வேறு நவீன யுக்திகளுடன் இந்த எப்4 ரக விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும் டசால்ட் அறிவித்து உள்ளது.
ரஃபேல் எப்4 போர் விமானம், போரின்போது விமானத்தின் செயல்திறனை அதிகரிக்கவும், நெட்வொர்க் இணைப்பு மற்றும் இணையதளங்கள் மூலம் தரவுகளைப் பெறவும், குறிப்பாக செயற்கைக்கோள் தகவல்தொடர்பு மற்றும் மென்பொருள் சேவைகள் மேம்ப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.