டில்லி
ரஃபேல் விமான விலை விவரங்களை மோடி அரசு வெளியிட மறுக்கும் நிலையில் அதே விவரங்களை பிரான்ஸ் அரசு தர தயாராக உள்ளதாக ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்துக்காக பிரான்ஸில் இருந்து ரஃபேல் ரக விமானங்கள் வாங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. அந்த விமானங்களை மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் ரூ.526.1 கோடி ரூபாய்க்கு வாங்க பேரம் பேசப்பட்டதாகவும் ஆனால் தற்போது மூன்று மடங்கு விலை கொடுத்து அதே விமானங்களை மோடி அரசு வாங்க உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
விமானங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் 36 ரஃபேல் ரக விமானங்களை தலா ரூ1670 கோடி வீதம் இந்தியாவுக்கு விற்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டதை அக்கட்சி சுட்டிக் காட்டியது. ஆனால் மோடி அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் விலை விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.
சமீபத்தில் இந்தியா வந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரோனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது ரஃபேல் ரக விமான விலை விவரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் விமான விலை விவரங்களைவெளியிட தயாராக உள்ளதாகவும் ஆனால் அதை தடுப்பது மோடி அரசுதான் என்றும் ராகுல் காந்தியிடம் கூறி உள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “நேற்று நான் பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தேன். நாங்கள் தவறான செய்திகள் உட்பட பொதுவான பல விவகாரங்களைக் குறித்து விவாதித்தோம். சர்வதேச அளவில் ஏபட உள்ள அனைத்து மாறுதல்களிலும் அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளதை தெரிவித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாக்ரோன் மற்றும் மன்மோஹன் சிங்குடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிந்துள்ளார்.