ந்திய சுதந்திரத்திற்கு பின்பு எத்தனையோ நூறை (100 ) கடந்து வந்திருக்கிரோம். அவற்றில் பல மகிழ்ச்சியான 100 , ஒருசில மிக துயரமான 100. நேற்றைய தினம் விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை கடந்து, 250 -கும் அதிகமான உயிர்களை இழந்தும், மிக துயரியல் சம்பவமாக நம் கண் முன்னாள் கடக்க முடியாமல் கடந்து சென்றது.

சராசரி இந்திய குடிமகனாக நமக்கெல்லாம் உணவளித்த, உணவளிக்கின்ற ஒரு உன்னத குடியின் அழகை ஓசை எங்கள் காதுகளில் 100 நாட்களுக்கும் மேலாக ஒலித்து, காதுகளை மரத்துப்போக செய்தன. அந்த அவலகூக்குரல்,எங்களுடைய அன்றாட வேலையில் கரைந்துபோனது. எங்கள் மூதாதையரும் விவசாயக்குடி என்பதை மனம் எண்ணினாலும், காலசூழ்நிலை நம்மை நின்று சிந்திக்கச்செய்வதில்லை. நம் தட்டில் உணவிருக்கும் வரை நாம் சிந்திக்கபோவதுமில்லை. ஆனால், நமக்கான உணவளிப்பவர்களையே நமக்கான நலன்குறித்து சிந்திக்கவேண்டிய பாரிய கடமையை மறந்து,  வேடிக்கை பார்க்கும் கூட்டமாக நாம் இருக்கிறோம்.

இந்திய வேலைவாய்ப்பில் (42 %) அதிகமானவர்களின் வாழ்வாதாரமாக விவசாயத்துறை திகழ்கிறது.  இப்பொழுது கொண்டு வந்திருக்கும் விவசாய சீர்திருத்த சட்டங்களினால், விவசாயத்துறையில் ஏற்படப்போகும் வேலையிழப்புகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற வரைவு திட்டம் மத்திய அரசிடம் இல்லை. ஏற்கனவே, பெருகி வரும் வேலைவாய்ப்பின்மையோடு, இந்த புதிய வேலையிழப்புகளும் சேர்ந்து நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணராதவர்களாய் நாமும் நமது அரசாங்கமும் உள்ளது.

விவசாய சீர்திருத்தங்கள் காலத்தின் கட்டாயமாக கூட இருக்கலாம், ஆனால், அது அனைத்து தரப்பினரின் கருத்துக்களை உள்வாங்கி அவர்களின் நியாயமான சந்தேகங்களை களைந்து படிப்படியாக நடைமுறைப்படுத்தவேண்டிய சீர்திருத்தமாக இருக்கவேண்டும். ஒருதலைப்பட்சமான திணிப்பாக இருக்க முடியாது, அப்படியே திணித்தாலும், அந்த திட்டம் வெற்றி பெற முடியாது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% விவசாயத்துறை வாயிலாகவும், 15 % விவசாயத்துறை சார்ந்த துறையின் மூலமான பங்களிப்பை நாம் பெறுகிறோம். கிட்டத்தட்ட 33 % பங்களிக்கும் துறையின் சீத்திருத்தங்களை இத்தனை அவசர கோலத்தில் செய்யவேண்டிய அவசியம் என்ன ?

நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியை பங்களிக்கும் துறையின் மாற்றங்கள் மிக கவனமாக கையாளப்படவேண்டியதன்றி, அவசர கதியில் கையாளப்பட கூடாது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேலும், விவசாய போராட்டம் என்பது பஞ்சாப் மாநிலத்திற்கானது என்பதை போன்ற சித்தரிப்பும் மற்றைய மாநில விவசாயிகள் அதை எதிர்த்து போராட வில்லை என்பதையும் ஏற்கமுடியாது.  இது, NEET தேர்வை தமிழகம் மட்டுமே எதிர்க்கின்றது என்ற வாதத்தை போன்றது.

தமிழகம் NEET தேர்வை எதிர்க்கவேண்டியதற்கு  என்ன காரணம்?  ஏனெனில் தமிழகம் கல்வி துறையில் இந்திய தேசத்திற்கு  முன்னோடி மாநிலமாக உள்ளது. தமிழர்களுக்கு இருக்கும் பட்டறிவு மற்றும் சீர்நோக்கிய பார்வை இந்தியாவின் மற்ற மாநில மக்களுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

தமிழர்களின் இந்தி மொழி எதிர்ப்பையும், தாய்மொழி காப்பையும் 50 ஆண்டுகள் கழித்து இன்று இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் கையிலெடுத்து போராடுகின்றன. அதே போன்ற சுற்றுசூழலியல் சம்பந்தமான விசயங்களில் மலையாளிகளுக்கு உள்ள நுண்ணறிவும் அவர்களுடைய முன்னெடுப்பும் இந்தியாவின் ஏனைய மாநிலத்தவர்ளுக்கு கிடையாது.

இவையாவும், காலஓட்டத்தில் அம்மக்கள் பெற்ற பட்டறிவும் ,  அவர்களின் தொலைநோக்கு பார்வையும்தான். இதுதான், அவர்கள் மற்றவர்களை விட வேறுபட்டு நிற்க செய்துள்ளன.  அதன் நியாயத்தை மெய் அறிவுகொண்டு சீர்த்தூக்கி பார்க்கும் எவரும் ஏற்பார்கள்.  அப்படிதான்,  இன்று பஞ்சாப் மாநிலத்தவர்கள். இந்திய விவசாயத் துறையில்  60 % பங்களிப்பை பஞ்சாப் மாநில விவசாயிகளே  நல்குகின்றனர். அவர்களுக்கு , அத்துறையில் இருக்கும் அறிவும் தொலைநோக்கு பார்வையும் ஏனையவர்க்கு வ்ருவதற்கு இன்னும் 20 ஆண்டுகள்கூட  ஆகலாம். ஆனால், அவர்களின் நியாயம் மாறாது.

மேலும், இது விவசாயிகளுக்கு எதிரான சட்டமென்பதைவிட நுகர்வோருக்கு எதிரான சட்டம் என்பது கவலைக்குரிய விசயம். ஆனால், பரபரப்பான உலகில் நாம் அதை சிந்திக்கபோவதில்லை, ஏனெனில் நம்மில் பலர் வெந்ததை தின்று விதிவந்தால் போகும் மனநிலையில் உள்ளவர்கள்.

கட்டுரையாளர்:  ராஜ்குமார் மாதவன்