சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கிய தரமற்ற உணவால் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 2021 டிசம்பர் மாதம் 18 ம் தேதி ஊழியர்கள் நடத்திய போராட்டத்தால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஊழியர்கள் தங்கும் விடுதி மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு ஆகியவை தரமானதாக இல்லை என்று ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததை அடுத்து இங்குள்ள விடுதிகள் மற்றும் உணவு கூடங்கள் மூடப்பட்டு தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுதி மற்றும் உணவு கூடத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் பல்வேறு பராமரிப்பு பணிகள் மற்றும் மாற்றத்தை மேற்கொண்டு நன்கு மேம்படுத்தியுள்ளதாக தைவானைச் சேர்ந்த ஹான் ஹோய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹான் ஹோய் நிறுவனம் பாக்ஸ்கான் நிறுவனத்தில் சுமார் 2500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை தொழிற்சாலையில் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஊழியர்கள் பணியிட குறைபாடு குறித்து உடனுக்குடன் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கவும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஆப்பிள் நிறுவன ஐ-போன்-களுக்குத் தேவையான உதிரிபாகங்களை தயாரிக்கும் எட்டு இந்திய தொழிற்சாலைகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் நிறுவன வளாகத்தில் சுமார் ஒரு மாதத்திற்குப் பின் 500 ஊழியர்களுடன் இன்று மீண்டும் பணிகள் துவங்க இருப்பது ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.