பாம்பு இனம் குறித்து ஆய்வு செய்யவே அதிகம் விரும்புவதாக கூறுகிறார் கர்நாடகாவைச் சேர்ந்த வனவிலங்கு உயிரியல் ஆராய்ச்சியாளர் கௌரி சங்கர்.
ஊர்ந்து செல்லும் பேரினத்தைச் சேர்ந்த பாம்புகளில் பல்வேறு வகைகள் உண்டு, ஆனால் நம்மில் பெரும்பாலானோர் பாம்பென்றால் தொடைநடுங்கும் ரகமாகத் தான் இருக்கிறோம்.
விஷத் தன்மை கொண்ட பாம்புகளில் அரசனாக திகழ்கிறது ராஜ நாகம் அது பற்றிய புள்ளிவிவரங்களை ஆய்வு செய்த கௌரி சங்கர் குழுவினர், ராஜ நாகம் நான்கு வெவ்வேறு பரிணாம வளர்ச்சி பெற்ற பரம்பரையைக் கொண்டது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்திருக்கும் தகவலில் கூறியிருக்கிறார்கள்.
இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலை அடிவாரங்கள், அந்தமான் தீவுகள் என்று அனைத்து பகுதியிலும் உள்ள ஈர நிலங்களில் மட்டுமன்றி தெற்கு சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பெருமளவில் காணப்படும் இவ்வகை நாகம் தீண்டினாலே சொர்கம் தான்.
உயிரின ஆய்வில் ஆர்வமுள்ள பலதரப்பட்ட குழுக்களுடன் இணைந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திய ஆய்வில் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாடுகளில் வாழும் ராஜ நாகம் அனைத்தும் ஒரே வகையைச் சார்ந்தது என்ற நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
இந்தப் பகுதியில் உள்ள ராஜ நாகங்கள் அனைத்தும் வெவ்வேறு பரம்பரையைச் சேர்ந்தவை என்ற இந்த ஆய்வின் முடிவு இந்த இனம் தொடர்பான அடுத்தகட்ட ஆய்வுகளுக்கு அடிப்படையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.