சென்னை: 33 மாத திமுக ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.8,65 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக, ஏறத்தாழ 30 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்ப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இது ஒரு மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளம் என பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
திமுகவின் 32 மாத ஆட்சியில் கிடைத்த வெளிநாட்டு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக ஆட்சியின் 33 மாதங்களில் 8 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் இலட்சிய இலக்கை நிர்ணயித்து முதலமைச்சர் ஸ்டாலின் அரசு முனைப்புடன் செயல்படுகிறது. அதன் ம் முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில், சென்னை, கோவை, தூத்துக்குடியில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய் முதலீடுகளும், 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக கடந்த ஜனவரி 7, 8 தேதிகளில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காம் கட்டமாக முதலமைச்சரின் ஸ்பெயின் பயணத்தின்போது, 3 ஆயிரத்து 440 கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 44 தொழில்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 27 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் புரட்சிக்கான அடித்தளம் என்பதை இது கட்டுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.