அடீஸ் அபாபா:
விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தை 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தவறவிட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் இதே ரக விமானம் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர். இரு விமானமும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது.
எத்தியோப்பியாவில் விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக விமானி விமானத்தை செலுத்த சிரமமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதனால் விமானத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.
இந்நிலையில், ஆன்டோனிஸ் மாவ்ரோபோலோஸ் என்பவர் விபத்துக்குள்ளான விமானத்தை 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தவறவிட்டார்.
விமானத்தை தவறவிட்ட கவலையில் இருந்தவர், தான் செல்லவிருந்த விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.
ட்விட்டரில் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என் அதிர்ஷ்ட நாள் என்று குறிப்பிட்டு தாம் 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் உயிர் பிழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சில சமயங்களில் உங்கள் தாமதத்துக்கும் காரணம் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.