சென்னை: பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை, ரத்து செய்யக்கோரி, முன்னாள் துணைவேந்தர் கணபதி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி இருந்தபோது, பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, அவர்மீது, ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தன்மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கணபதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுமீது நீதிபதி நிர்மல் குமார் விசாரணை நடைபெற்றது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தார். முதல் தகவல் அறிக்கையில் எந்த இடத்தில், யாரிடம் பணம் பெற்றது உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை என்றும் காலதாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், யாரிடம் எவ்வளவு தொகை லஞ்சமாக பெறப்பட்டது என்ற பட்டியலை தாக்கல் செய்தார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் அவர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். அரசு உத்தரவின் பேரிலேயே, சோதனை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, விசாரணை தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் மனுதாரர் முறைகேடு செய்தது மட்டுமில்லாமல், தகுதி இல்லாத நபர்களுக்கு பணிகளை வழங்கி தகுதியுடைய நபர்களுக்கு பணியை மறுத்துள்ளார். இதனால் முறையாக படித்து தேர்வு எழுதுபவர்கள் பாதிக்கபட்டுள்ளார்கள். இதனால் கல்வி அமைப்பு முறை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் இது போன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் இல்லையென்றால் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து விடும் என தெரிவித்த நீதிபதி, வழக்கு ரத்து செய்ய முடியாது என்று கூறி கணபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளார் .