டெல்லி:
டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவி ஏற்றார். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனில் பைஜாலுக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹினி பதவி ப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த நிகழ்ச்சியல் கலந்துகொண்டார். டெல்லியின் 21வது துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆவார். 1969ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனில் பைஜால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய உள்துறை செயலாளராக இருந்தார்.
மன்மோகன் சிங் ஆட்சியில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதில் அனில் பைஜால் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டு இவர் ஓய்வு பெற்றார்.
ஏற்கனவே டெல்லி கவர்னராக இருந்த நஜீப் ஜங்குக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இதனால் நான் பெரியவனா.. நீ பெரியவனா.. என்ற பிரச்னை எழுந்தது. இதனால் டெல்லியில் முதல்வருக்கு அதிகாரமா? அல்லது கவர்னருக்கு அதிகாரமா? என்று இப்பிரச்னை தற்போது நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.