சென்னை:

திமுக முன்னாள் எ அமைச்சர் இன்பத்தமிழன், டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில், இன்று அங்கிருந்து விலகி, அதிமுகவில் ஐக்கியமானார்.

ஏற்கனவே அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு தாவிய பலர் தேர்தல் முடிவுக்கு பிறகு, மீண்டும் அதிமுகவுக்கு திரும்பி வரும் நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். இதன் காரணமாக டிடிவி தினகரனின் அமமுக கூடாரம் காலியாகி வருகிறது.

இன்று காலை தலைமை செயலகம் வந்த இன்பத்தமிழன் அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, பூங்கொத்து கொடுத்து  அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து துணைமுதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்தித்தும்  பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதிமுக.வில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ  தாமரைக்கனி. அடிதடிக்கு பேர் போன தீவிர அதிமுக விசுவாசி.  இவரது மகன் இன்பத்தமிழன். கடந்த  2001-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஜெயலலிதா தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினார்.

இடையில், அவரது நடவடிக்கை காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட, கடந்த  2006-ஆம் ஆண்டு திமுக.வில் இணைந்தார். பின்னர் அங்கிருந்து விலகி  2009-ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக.,வில் இணைந்தார்.

அதைத்தொடர்ந்து அதிமுகவில் பிரிவி ஏற்பட்ட நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக களமிறங்கினார். ஆனால், நடைபெற்று முடிந்த லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக காற்றில் அடித்து செல்லப்பட்டு விட்ட நிலையில், செய்வதறியாக திகைத்து வந்த இன்பத் தமிழன் மீண்டும் தாய்க்கட்சியான அதிமுகவில் இணைந்தார்.

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்த ஓபிஎஸ்ஐயும் சந்தித்து தன்னை அதிமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவல்..

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று, அமமுக கட்சியிலிருந்து விலகிய விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு.RT இன்பத்தமிழன் அவர்கள் நேரில் சந்தித்து கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார் என்று தெரிவித்து உள்ளார்.