லோக்பால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2002 கோத்ரா கலவர வழக்கில் நரேந்திர மோடியின் விடுதலையை உறுதி செய்த பெஞ்ச், பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் எஃப்சிஆர்ஏ திருத்தங்களின் செல்லுபடியை உறுதி செய்தது உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர் ஏ.எம்.கான்வில்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக நீதிபதி பி.சி.கோஷ் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிவடைந்த பிறவு 2022 மே மாதம் முதல் நீதிபதி பிரதீப் குமார் மொஹாந்தி இதன் தற்காலிக தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கரை தலைவராக நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர், கேபினட் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் குரூப் ஏ அதிகாரிகள் உள்ளிட்ட பொதுப் பணியாளர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கவும், அவர்களை தொடர்பான விவகாரங்களை ஆராயவும் லோக்பால் அமைப்பிற்கு அதிகாரம் அளித்து 2013ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.
லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பிரதமரை தலைவராகக் கொண்ட குழு பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ஒப்புதலின் அடிப்படையில் நியமிக்கப்படுவார். இந்த தேர்வுக் குழுவில், மக்களவை சபாநாயகர், மக்களவை எதிர்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சிறந்த நீதிபதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் உடன் நீதிபதி லிங்கப்ப சுவாமி (முன்னாள் ஹெச்பி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி & கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி), நீதிபதி சஞ்சய் யாதவ் (முன்னாள் அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி) மற்றும் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி (முன்னாள் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி & அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, தற்போதைய இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர்) ஆகியோர் லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.