நொய்டா:
கிரேட்டர் நொய்டாவில் முன்னாள் தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரர், அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது நேற்று பிற்பகல் தெரிய வந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா பாக்சிங் சங்கத்தில் உறுப்பினரான ஜிதேந்திர மான் என்ற 27 வயதான முன்னாள் பாக்சர், தான் தங்கியிருந்த அடுக்குமாடி வீட்டில் மர்மமான முறையில் சுடப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார்.
யாரோ அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
பொதுவாக மாலை நேரத்தில் ஜிம்முக்கு செல்வது ஜிதேந்திராவின் வழக்கம். ஆனால் சம்பவத்தன்று அவர் ஜிம்முக்கு செல்லாததால் அவரது நண்பர் அவருக்கு போன் செய்திருக்கிறார். அப்போது போன் எடுக்கப்படாமல் தொடர்ந்து மணி அடித்துக்கொண்டே இருந்தாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிளாட் நிர்வாகி, மற்றொரு சாவி மூலம் வீட்டை திறந்தபோது, ஜிதேந்திரா சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகுதான் அவரது மரணம் குறித்து தெரிய வரும் போலீசார் கூறி உள்ளனர்.