இலங்கையில் கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ம் தேதி கிருத்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கும் முன்னாள் அதிபர் சிறிசேனா-வுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இதில் 11 இந்தியர்கள் உள்பட 269 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் பொறுப்பேற்றது இது தொடர்பாக 2019 ஜூன் மாதம் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே-வின் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற குழு விசாரணை செய்தது.

விசாரணையில், தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பாக இந்திய உளவுத்துறையிடம் இருந்து இலங்கை அதிபர் சிறிசேனா-வுக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், நாடாளுமன்ற குழு முன் ஆஜரான காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா, இந்த தொடர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று தன்னை ராஜினாமா செய்யும்படி சிறிசேனா வலியுறுத்தியதாகவும் இதற்கு கைமாறாக உயர் அரசு பதவி வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் அப்போது இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா தோல்வி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்சே-விடம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற படுகொலை தாக்குதல் அரசியல் காரணங்களுக்காகவும் சிறிசேனாவின் அலட்சியப்போக்கும் காரணம் என்று கூறிய தேசிய கத்தோலிக்க கமிட்டி உறுப்பினர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்திய அரசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய அதிகாரிகள் மற்றும் முன்னாள் அதிபர் சிறிசேனா ஆகியோர் மீது 2021 பிப்ரவரி மாதம் விசாரணை ஆணையம் ஒன்றை அப்போதையை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார்.

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை அடுத்து 45 வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளாமானோர் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணை நிறைவு பெறாமல் இருந்ததைத் தொடர்ந்து தற்போது அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே இந்த விசாரணை தொடர்பாக பிரிட்டன் புலனாய்வு அமைப்பிடம் ஜூன் மாதம் உதவி கோரினார்.

இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கும் சிறிசேனா-வுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை நீதிமன்றம் கூறியிருப்பதோடு அவரை அக்டோபர் 14 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.