டெல்லி: முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு, ஒதுக்கப்பட்ட 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த ஜாகுவார் சொகுசு கார் கேட்பாரன்றி கிடப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். அவருக்கு, விலை உயர்ந்த கார் ஒன்றை அலுவலுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அவரும் ஜாகுவார் என்ற சொகுசு காரை தேர்வு செய்து பயன்படுத்தினார்.
தற்போது அவர் அந்த காரை பயன்படுத்துவது இல்லை. சபாநாயகராகவும் பதவியில் இல்லை. ஆனால், அவருக்கான கார் எந்தவித கேட்பாரருமின்றி, பராமரிப்பின்றி கிடக்கிறது. காரணம் அவருக்கு பின் சபாநாயகராக வந்த ஓம் பிர்லா, டொயோட்டா கம்பெனிகாரை உபயோகப்படுத்தி வருகிறார். அதன் விலை 36.74 லட்சம்.
சுமித்ரா மகாஜனுக்கான அந்த கார் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன. இது பற்றி அரசு தரப்பில் இருந்து கூறப்படும் விவரங்கள் இது தான்: 2014ம் ஆண்டு 2019ம் ஆண்டு வரை சபாநாயகராக இருந்தவர் சுமித்ரா மகாஜன்.
லிட்டருக்கு 13 கிமீ கிடைக்கும் ஜாகுவார் செடான் ரக காரை பயன்படுத்தினார். அதற்கு முன்னதாக அவர் வைத்திருந்தது டொயோட்டா நிறுவன கார். தற்போது மகாஜன் பயன்படுத்திய கார் கேட்பாரன்றி இருக்கிறது.
அலுவல் பயன்பாட்டுக்காக விளையாட்டு ரக காரை ஏன் வாங்கினார் என்பது தெரியவில்லை. அரசு பணத்தில் எதற்காக இப்படி வீண் செலவினம் என்று புரியவில்லை.
ஆனால் இது குறித்து மகாஜன் கூறிய விளக்கமோ வேறாக இருக்கிறது. அவர் கூறியிருப்பதாவது: எனக்கு கார்களை பற்றி எதும் தெரியாது. நான் சொகுசாக செல்ல வசதியாக கார் இருக்கிறதா என்று தான் பார்த்தேன். ஜாகுவார் கார்களில் 2 வகைகள் இருந்தன. ஆனால் கடைசியாக வாங்கியது, நான் தேர்ந்தெடுத்த கார்களில் இருந்து மாறுபட்டது.
அந்த காரில் எனக்கு கால் வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. ஒருவேளை மற்றவர்களுக்கு அவ்வாறு இருந்திருக்கலாம். எனக்கு அப்படி இல்லை. அந்த தருணத்தில் ஜாகுவார் காரை எனக்கு பரிந்துரைத்தவர்கள் யார் என்று நினைவில்லை என்றார்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் சபாநாயகர்களுக்கு பலவிதமான கார்கள் உபயோகத்திற்காக வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த 18 ஆண்டுகாலத்தில் மொத்தம் 5 கார்கள் வாங்கப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக தெரிய வந்திருக்கிறது.