சண்டிகர்: ஹரியானாவில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததன் மூலமாக, தேர்தலில் மக்கள் வழங்கியத் தீர்ப்பை ஜன்னாயக் ஜன்தா கட்சி(ஜேஜேபி) அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ஹரியானா முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா.

அவர் கூறியுள்ளதாவது, “மக்கள் யார் வேண்டாமென வாக்களித்தார்களோ, அவர்களுக்கே தனது ஆதரவை வழங்கியுள்ளது ஜேஜேபி. இதன்மூலம் மக்களின் தீர்ப்பை அவர்கள் அவமரியாதை செய்துள்ளனர். அதேமசயம், ஹரியானாவின் புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இரு கட்சிகளுக்குமிடையே, அரசை நடத்துவதில், எந்தளவிற்கு ஒத்துழைப்பு ஏற்படுமென்பதை காண விரும்புகிறேன். அவர்கள் மாநிலத்தின் நலனிற்காக உழைப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

ஹரியானாவில் ஆளுங்கட்சியாக இருந்த பாரதீய ஜனதாவிற்கு, இத்தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், 40 இடங்களைப் பெற்ற பாரதீய ஜனதாவிற்கு, 10 இடங்களை வென்ற ஜேஜேபி கட்சி ஆதரவளித்து துணை முதல்வர் பதவியைப் ப‍ெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.