சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 15ஆயிரத்தை கடந்த நிலையில், தமிழ்நாட்டிலும் தினசரி பாதிப்பு 1500ஐ நெருங்கி உள்ளது. தொற்றுபரவல் அதிகரிப்பு காரணமாக, சென்னை உள்பட  பல மாவட்டங்களில் பொதுமக்கள் முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும்,  கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது  தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ,இதனால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்  எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.