லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் உள்பட 3 பேர் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கு பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ரிஷசுனக் களமிறங்கினார். அவரை எதிர்த்து, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த லிஸ் டிரஸ் போட்டியிட்டார். இதில், லிஸ் டிரஸ் வெற்றிபெற்று பிரதமராக பதவி ஏற்றார். ஆனால், அவரால் பிரதமர் பதவியில்  தாக்குப்பிடிக்க முடியவில்லை. வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்த நிலையில், பதவியை விட்டு விலகினார். அவரது விலகளுக்கு முக்கிய காரணமாக, அவர் வெளியிட்ட சில அறிவிப்புகள் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள  பிரிட்டனின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்த  லிஸ் டிரஸ் பட்ஜெட்டில், செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிட்டார். இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதுடன், பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்த உதவவில்லை.  இதனால், டாலருக்கு நிகரான பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு குறைந்து வருகிறது. பங்குச் சந்தை மதிப்புகளும் வீழ்ச்சி அடைந்தது. இந்த தவறுக்காக டிஸ் டிரஸ் மன்னிப்பும் கேட்டிருந்தார். ஆனால், தொடர் விமர்சனங்களை அடுத்து, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகளை கன்சர்வேடிவ் கட்சி தொடங்கி உள்ளது. புதிய பிரதமருக்கான தேர்தல் அடுத்த வாரத்துக்குள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போட்டியில், மீண்டும்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே அதிக அளவிலான ஆதரவு இருந்த நிலையில், அவரை பிரதமராக ஒருதரப்பினர் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ரிஷி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதாலும், அவர் அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். இரட்டை குடியுரிமை வைத்திருப்பது பிரிட்டனில் இயல்பானது. எனினும் நாட்டைவ ழிநடத்த வேண்டிய பிரதமர் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதை மக்கள் விரும்பவில்லை. அதுமட்டுமின்றி கன்சர்வேட்டிவ் கட்சியில் பெரும்பாலானோர் வெள்ளையின வாதத்தை ஆதரிப்பவர்கள். இந்த காரணங்களால்  இங்கிலாந்தை சேர்ந்தவரே பிரதமராக வேண்டும் என கருத்துக்களும் நிலவி வருகிறது.

இந்த நிலையில்,  கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் பிரதமர் பதவிக்கான போட்டியில்  இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மொரடான்ட், பிரிட்டன் பாதுகாப்புத் துறை செயலாளர் பென் வாலஸ் களமிறங்கி உள்ளனர். அத்துடன் ரிஷி சுனக் களமிறங்குவார் என எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது.

இந்த நிலையில், வெளிநாட்டில் தங்கியிருந்த  முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசரமாக தாயகம் திரும்பியிருக்கிறார். அதனால், அவர் மீண்டும் பிரதமர் போட்டியில் குதிக்க இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அவர் சில நட்பு நாடுகளிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.  அங்கு தற்போதைய நிலையில்,  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்குக்கு அதிகஅளவிலான ஆதரவு இருப்பதால், அவரை போட்டியில் இருந்து விலக வைத்து, அவரது ஆதரவுடன் போரிஸ் ஜான்சன் மீண்டும் களமிறங்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோல, அமைச்சரவையில் உள்ள 3 அமைச்சர்கள் ஜான்சன் மீண்டும் வருவதை வரவேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சில எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் பதவிக்கு வருவதை விரும்பவில்லை, அவர் வந்தால் தங்களது ஆதரவை திரும்ப பெறுவோம் என என்ற தெரிவித்து உள்ளனர். இதனால், அடுத்த பிரிட்டன் பிரதமர் யார் என்பதில் பலத்த குழப்பம் நிலவி வருகிறது.