புதுடெல்லி: மேன்கடிங் என்பது கிரிக்கெட் விதிமுறைக்கு உட்பட்டதுதான்; எனவே, அந்த விஷயத்தில் விளையாட்டு உணர்வு மற்றும் கருணை ஆகிய விஷயங்களை உள்ளே நுழைக்கக்கூடாது என்றுள்ளார் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்.
அவர் கூறியுள்ளதாவது; பவுலர் பேட்ஸ்மேன் மீது கவனம் செலுத்துகிறார், ரன்னர் முனையில் இருக்கும் மட்டையாளர் பந்து டெலிவரியாகி செல்லும்வரை வெளியே காலடி எடுத்து வைக்கக்கூடாது, இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஏனெனில், அவர் பேட்டிங் செய்யவில்லை அல்லது வேறு எதையும் சிந்திக்கப் போவதுமில்லை. கிரீசுக்குள் நிற்க வேண்டியதுதானே!
எனவே, பேட்ஸ்மேன் கோட்டை விட்டு வெளியே நகரக்கூடாது. ஒரு பந்துவீச்சாளர் தான் வீசுகையில் எதிர்முனை பேட்ஸ்மேன் மீதுதான் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், ரன்னர் முனையில் இருப்பவர் இதை தனக்குச் சாதகமாக்கி வெளியே வருகிறார்; ரன் அவுட் செய்யப்படுகிறது என்றால் எனக்கு இதில் ஒரு பிரச்சினையும் இல்லை.
இந்த இடத்தில், கருணை என்பதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. ஸ்பிரிட் ஆஃப் த கேம் என்பதை தேவையில்லாமல் கொண்டு வராதீர்கள். ரன்னருக்குத்தான் ஸ்பிரிட் ஆஃப் த கேம் வேண்டும். பேட்ஸ்மேன் கிரீசுக்குள் இருக்க வேண்டும்.
பேட்ஸ்மென் தெரியாமல் கவனக்குறைவினால் கிரீசுக்கு வெளியே வந்து விடுகிறார். அது ஒரு போட்டியின் கடைசிப் பந்து என்று வைத்துக் கொள்வோம். அப்போது ரன் அவுட் வாய்ப்பு உருவாகிறது; ஆனால் பேட்ஸ்மென் ஒரு இன்ச் உள்ளே வந்து விடுகிறார் என வைத்துக் கொள்வோம். அப்போது, ரன்னர் பந்து வீசுவதற்கு முன்னதாகவே, 3 அடி முன்னால் கோட்டைத் தாண்டி சென்றிருக்கிறார் என்றால் அந்த ஆட்டத்தின் முடிவு எப்படி நியாயமாக இருக்க முடியும்?
ஏதோ ஒரு அணி, அதற்கான விலையைக் கொடுத்தாக வெண்டும், இதில் சமநிலையை நான் பார்க்க விரும்புகிறேன்” என்றுள்ளார் அவர்.