விளாத்திக்குளம்:

விளாத்திக்குளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சின்னப்பதை  எதிர்த்து  அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார்.

மார்க்கண்டேயன்

நாடு முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் நாடாளு மன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ந்தேதி நடை பெறுகிறது.

இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில், விளாத்திக்குளம் தொகுதிக்கு கடம்பூர் ராஜுவின் ஆதரவாளரான  முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்எல்ஏவான மார்க்கண்டேயன் இந்த தொகுதியில் போட்டியிட மனு செய்திருந்த நிலையில், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது, அந்த பகுதி அதிமுகவினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் தனது  செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்த மார்க்கண்டேயன், விளாகத்திக்குளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றி உள்ளது.