மதுரை: குடியிருக்க இலவச வீடு ஒதுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்எ நன்மாறன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார். இது பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறன். இவர், மதுரை மேல பொன்னகரத்தைச் சேர்ந்தவர். இவர் 2 முறை, மதுரையில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். எளிமைவாதியாக நன்மாறன், யாரிடமும் இருந்து எந்தவித உதவியையும் எதிர்பார்க்காமல் பணியாற்றியவர். தற்போது வயதான நிலையில், குடியிருக்கு சொந்த இடமின்றி வசித்து வந்த நன்மாறன், தனக்கு அரசு சார்பில் ஒரு வீடு ஒதுக்க வேண்டும் என இன்று காலை மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் வந்து மனு கொடுத்தார்.
வாரம்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதன்படி, இன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர் முகாமில், முன்னாள எம்எல்ஏ நன்மாறனும் தனது மனைவியுடன் பொதுமக்களுடன் வரிசையில் மனு கொடுக்க நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை அடையாளம் கண்ட சிலர், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரியிடம் அறிமுகப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து நன்மாறன் அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
அவரது மனுவில், ’நான் இப்போது மதுரை மேல பொன்னகரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். சொந்த வீடு எதுவும் இல்லாத எனக்கு, மாதா மாதம் வாடகை கட்ட முடியாமல் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே மதுரை ராஜாகூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், எனக்கு வீடு ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கோரியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, மனுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மனுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை கேட்க முன்வந்தபோது, சிரித்துக்கொண்டே ”நான் யாரிடமும் இதுவரை உதவி கேட்கவில்லை” என கூறிவிட்டு ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார்.