சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை  சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. சர்ச்சைக்குரியவரான இவர்மீது, ஆவின் உள்பட பல்வேறு அரசு துறைகளில்  வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு,  மோசடி செய்ததாக  புகார் உள்ளது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில், ராஜேநிதரபாலாவி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த புகாரின்பேரில் தான் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக, முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி  முன் ஜாமீன் கேட்டிருந்தார். இந்த மனுமீதான விசாரணை நடைபெற்றபோது, இந்த மோசடி புகாருக்கும்  தனக்கு எந்த தொடர்பில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதையடுத்து, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த புகாரின் பேரில், வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பண மோசடி புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும்,  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதால், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார்  முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால்  விரைவில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.